ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஆந்திர, ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநிலத்தில் 49 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்தில் 114 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், மக்களவைத் தேர்தல் 2024க்கான 17 வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு பட்டியலையும் காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது. ஒடிசாவில் 8 இடங்களுக்கும், ஆந்திராவில் 5 இடங்களுக்கும், பீகாரில் 3 இடங்களுக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு இடத்துக்கும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
எனது 3ஆவது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல்: பிரதமர் மோடி சூளூரை!
அதன்படி, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமனம் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட நிலையில், கடப்பா தொகுதியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021ஆம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் தனிக்கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில், தனது கட்சியை காங்கிரஸுடன் அண்மையில் இணைத்தார். அதன் தொடர்ச்சியாக, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டார்.