
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர் வெறும் 11 ரூபாய் செலவில் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாஹித் அலி, ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நபிசதா பேரேஸ்டா. ஜாஹித்தும், நபிசதாவும் ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இதன் பின்னர், நபிசதா, ஜாஹித்தை தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தார், அப்போது இருவருக்கும் இடையில் இருந்த நட்பு காதலாக மலர்ந்தது. காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், நபிசதா இது குறித்து அவர் பெற்றோருக்கு கடிதம் எழுதினார்.
இந்தியரை தனது பெற்றோர் மருமகனாக ஏற்று கொள்வார்களா என நபிசதா கவலைப்பட்ட நிலையில், அவர் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜாஹித்- நபிசதாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்னர் மிக எளிமையாக வெறும் 11 ரூபாய் செலவில் நடந்தது.
அந்த 11 ரூபாயும் திருமணத்திற்கு தலைமை தாங்கிய மதகுருவுக்கு வழங்கப்பட்டது. ஜாஹித்தின் தந்தை தேவ்கான், மிக எளிமையாக நடந்த திருமணம் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
‘‘இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு என் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான காதல் போலவே வலுப்பெறும் என தான் நம்புவதாகவும்’‘ அவர் கூறியுள்ளார்.