Election 2024 | உலகில் நம் செல்வாக்கை நிர்ணயிக்கும் தேர்தல்

By Swaminathan Gurumurthy  |  First Published Apr 8, 2024, 11:28 AM IST

இதுவரை நடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு 2024 தேர்தலுக்கு சர்வதேச அளவில் என்ன முக்கியத்துவம் என்பதை இந்த பகுதியில் விளக்குகிறேன்.


ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டத்தில் நடக்கவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயகத் திருவிழா என்று கூறினால் அது மிகையாகாது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் முன் எழும் சர்வதேச, தேசிய, தமிழக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பற்றி மூன்று பகுதிகளில் விளக்க விரும்புகிறேன். இதுவரை நடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு 2024 தேர்தலுக்கு சர்வதேச அளவில் என்ன முக்கியத்துவம் என்பதை இந்த பகுதியில் விளக்குகிறேன்.

வெறுத்தவர்கள் விசிறியானார்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சர்வதேச அளவில் இருக்கும் முக்கியத்துவத்துக்கு காரணம் என்ன? இந்த நாட்டுக்கு சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் பெரும் செல்வாக்கு. நம் நாட்டுக்கு இருக்கும் பெரும் செல்வாக்குக்கு காரணம்? அமெரிக்கத் ஜனாதிபதி உள்பட உலகத்தலைவர்கள் அனைவரையும் மிஞ்சும் செல்வாக்குள்ள தலைவராக உருவாகியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி. உலகத் தலைவர்களிலேயே மிகவும் பிரபலமான தலைவர் மோடி என்று பிரபல அமெரிக்கா மார்னிங் கன்சல்ட் ஆய்வமைப்பு 5 ஆண்டுகளாக தொடர்ந்து கணித்துவருகிறது. உலகத் தலைவர்கள் மோடியை வானளாவ புகழ்கின்றனர். “மோடி பாஸ்” என்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர். “உலகிலேயே மிகவும் நேசிக்கப்படுபவர் மோடி” என்கிறார் இத்தாலிய பிரதமர். மோடி “பவர்ஃபுல், அவருடைய ஆட்டோகிராஃபை கேட்கத் தோன்றுகிறது” என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி, “எந்த நாட்டுக்கும் அஞ்சாதவர், அறிஞர்” என்கிறார் ரஷ்ய அதிபர், மோடி “உலகத்தலைவர்” என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர். மோடி காலில் விழுந்து வணங்கினார் பப்புவா கினி நாட்டு அதிபர். இப்படி மோடியை புகழ்பவர்கள் பட்டியல் நீளுகிறது. இன்று அவரை போற்றிப்புகழும் மேற்கத்திய, வளர்ந்த நாடுகள் 20 ஆண்டுகளுக்கு முன் அவரை தீண்டத்தகாதகத்தவர் என்று பறைசாற்றி, தங்கள் நாடுகள் வர அவருக்கு விசா மறுத்தன. எந்த மோடியை அமெரிக்கா இங்கு வராதே என்று கூறியதோ அந்த மோடியை பார்த்து அமெரிக்க ஜனாதிபதி பைடன் “உங்களால் எனக்கு பெரிய பிரச்சனை. நீங்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது எங்களில் ஒவ்வொருவரும் உங்களைக் காண விரும்புகிறார்கள். உங்கள் டின்னருக்கு அனுமதி பாஸ்கள் காலியாகிவிட்டது. என்னுடைய சகாக்களை கேளுங்கள். சினிமா ஸ்டார்கள் முதல் என் உறவினர்கள், நான் கேள்விப்படாதவர்கள் கூட [டின்னர் பாஸுக்கு] எனக்கு போன் செய்கிறாரகள். நீங்கள் உண்மையிலேயே பிரபலமானவர். நீங்கள் ஜனநாயக நாடுகளில் பெரும் மாற்றம் கொண்டுவருகிறீர்கள்” என்று கூறினார் எவ்வளவு பிரமாண்டமான மாற்றம். செல்வாக்கு உயர்ந்து 2022-ல் ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைவரான மோடி அதன் பரிமாணம், திசை யையே மாற்றி பெரும் வெற்றி கண்டார் 

தங்கள் அகம்பாவத்தை விழுங்கிவிட்டுத் தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 2014-ல் வெற்றிபெற்ற மோடியை [வேண்டா வெறுப்பாக] வரவேற்கத் தொடங்கினர். அன்று மோடியை வெறுத்தவர்கள் இன்று அவருடைய விசிறிகள். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம். ஒன்று இரவு பகல் பார்க்காத அவரது உழைப்பு. முதல் 4 ஆண்டுகள் அவர் உலகம் முழுவதும் சூறாவளி பயணம் செய்தார். [அவரை உலகம் சுற்றும் பிரதமர் என்று நமது அரசியல் கட்சிகள் ஊடகங்கள் கிண்டல் செய்தன]. கடின உழைப்பின் மூலம் உலகத் தலைவர்களை நண்பர்களாக்கினர். உதாரணம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்ற இந்திய பிரதமர் மோடி தான். பிறகும் இரண்டு முறை ஆஸ்திரேலியா சென்றார் அவர். இன்று நம் நாட்டுக்கு மிக நெருங்கிய நட்பு நாடு ஆஸ்திரேலியா. அதன் பிரதமர் மோடியை தான் பாஸ் என்கிறார். இந்த பெருமைகள் தனிப்பட்ட மோடியின் பெருமைகளல்ல. அவர் போன்றவரை தேர்ந்தெடுத்தத இந்த நாட்டுக்கே பெருமை. உதாரணமாக ஒரு ஆபிரகாம் லிங்கனால், கென்னெடியால் எப்படி அமெரிக்காவுக்கு பெருமையோ, அப்படி மோடியால் நமக்கும் பெருமை. உலக ஆளுமைமையாக மோடி உருவாகக் காரணம் என்ன? அவரது ஆட்சியில் உலகைக்கவர்ந்த நமது நாட்டின் வளர்ச்சி.

பொருளாதாரம்: “வலுவற்ற 5” லிருந்து “வலுவான 5”

10-ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், 2-ஜி நிலக்கரி காமன்வெல்த் மற்ற ஊழல்களாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் வளர்ச்சி குன்றி, விலைவாசி வானளாவ உயர்ந்தது. இந்திய கம்பெனிகள் ஏராள கடனில் சிக்க, அது வரக்கடன்களாக மாறி, அரசு வங்கிகள் திவாலா நிலைக்கு சரிந்தன. அந்நிய செலாவணி தேவைக்கு வெளிநாடுகளில் கந்துவட்டிக்கு கடன் வங்கிய நிலையில் இருந்த நம் நாட்டை “உலகில் 5 வலுவற்ற” [fragile] பொருளாதாரங்களின் வரிசையில் சேர்ந்தன உலக நிதி அமைப்புகள். இன்று உலகில் 5-வது வலுவான பொருளாதாரமாக மாறியிருக்கிறது நம் நாடு. இந்த மாற்றம் தானாக வரவில்லை. இதற்குக் காரணம் கடுக்காய் கஷாயம், விளக்கெண்ணெய் சிகிச்சை போன்ற கடுமையான பொருளாதார கொள்கைகள், இதுவரை நினைக்காத பிரும்மாண்ட திட்டங்கள், அவைகளை நிறைவேற்ற தனது அயராத உழைப்பை உதாரணமாக்கி, அமைச்சர்கள், அதிகாரிகளை விரட்டி விரட்டி வேலைவாங்கும் மோடி தான் காரணம். மேல்மட்ட ஊழலை அறவே ஒழித்த மோடி, மோசடி ஊழலுக்கு எதிராக போரே தொடங்கினார். மாலை போட்டுக்கொண்டு ஊரை வலம்வந்த பிரபல தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடி வெளிநாடுகளில் அகதிகளானார்கள். கடன்வாங்கி திரும்பத் தராதவர்களை அச்சுறுத்தும் கடும் நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தின் மூலம் அவர்கள் கம்பெனிகளை அவர்களிடமிருந்து பிடுங்கி கடனை வசூல் செய்ய வகைசெய்தார் மோடி. நஷ்டத்தில் ஓடி வாராக்கடன் காரணமாக ஏறக்குறைய திவாலாவான அரசு இன்று வரலாறு காணாத அளவு லாபம் ஈட்டுகின்றன. நெடுஞ்சாலை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அடிப்படைத்தொழில்களில் இதுவரை காணாத வளர்ச்சி. 2014-ல் 20000 புள்ளிகளாக இருந்த பங்கு சந்தை இன்று 73000 புள்ளிகளை தாண்டிவிட்டது. பங்கு சந்தையை வைத்துத்தான் உலக நிதி அமைப்புகள் ஒரு நாட்டின் பொருளாதார நிலையை கணிக்கின்றன. இதையெல்லாம் கண்டு நம்மை சட்டைசெய்யாத உலகநாடுகள் நம் மீது பெருமதிப்பும் நம்பிக்கையும் கொள்ளத் தொடங்கின.

பிரமிக்கவைத்த சாதனைகள்

மோடியின் ஆசாதாரணமான முடிவுகள், சாதனைகள் உலகை பிரமிக்கவைக்கின்றன. உதாரணமாக அவரது பல சாதனைகளில் 6 சாதனைகளின் தாக்கத்தை பார்க்கலாம். ஒன்று, 2020-ல் கரோனா தாக்கம் வந்தபோது சுயசார்பு பொருளாதாரம் தான் ஒரே வழி என்று கூறி, உலகமே அஞ்சிய அந்த கொடும் நோய்க்கு சுதேசி தடுப்பூசி தயாரிபோம் என்று கூறினார் மோடி. “நீங்களா தடுப்பூசி கண்டிபிடிப்பதா?” என்று நம்மை எள்ளி நகையாடியது உலகம். தடுப்பூசி தயாரிப்புக்கு அரசு நிதி உதவி செய்து இரவு பகல் பார்க்காமல் விஞ்ஞானிகளுடன் பேசி, அவர்களை எட்டே மாதங்களில் ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசி பிடிக்கவைத்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் மோடி. அதற்கு மேல் ஒரு படி சென்று 102 கோடி பேருக்கு இருமுறை தடுப்பூசி போட்டு அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்துகொண்டிருக்கும் போது கரோனாவை வீழ்த்தியது நம் நாடு. அந்த சாதனையைக் கண்டு உலகே மூக்கில் விரலை வைத்தது. இரண்டு, வங்கிக்கணக்கு இல்லாத 52 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி, மக்களனைவருக்கும் ஆதார் கார்டு தந்து, ரூ 5.53 லட்சம் கோடி உதவித் தொகைகளை அந்த கணக்குகளில் சேதாரமில்லாமல் சேர்த்ததும் பெரிய சாதனை. இதன் மூலம் ரூ 3.48 லட்சம் கோடி சேதாரம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இன்று ஏழைகள் கணக்கில் 2.30 லட்சம் கோடி சேமிப்பு இருக்கிறது மூன்று, 34 கோடி பேருக்கு மருத்துவ இன்சூரன்ஸ், அதன் மூலம் 5.8 கோடி பேருக்கு ரூ 66000 கோடி செலவில் சிகிச்சை, அதன் மூலம் சாமானியர்கள் சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்காத நாடு என்று வெளிநாடுகளில் நம்மக்கு இருந்த அவப்பெயர் நீங்கியது  நான்கு, 5.3 லட்சம் கிராமங்களில் 11.5 கோடி கழிப்பறைகள். இதன் மூலம் திறந்தவெளியில் மலம் கழிக்கும் மக்கள் என்று உலக நாடுகள் நம்மை பழிப்பது நின்றது.  ஐந்து, 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் காஸ். இது பெண்களின் பன்முக சுகாதாரத்தை பாதுகாக்கும் திட்டம் மட்டுமல்லாமால் சுற்றுச்சூழலுக்கு அவசியமானதும் கூட. இதையும் உலகம் பாராட்டியது. ஆறு, 2.6 கோடி கிராம குடும்பங்களுக்கு இலவச வீடுகள். கோடிக்கணக்கில் வீடுகளா? வாயைப் பிளந்தது மேற்கத்திய உலகம் 

“சரியான திசையில் செல்லும் பாரதம்”

இந்த பிரும்மாண்டமான திட்டங்கள் மூலம் உலகின் கவனத்தையே ஈர்த்திருக்கிறது நம் நாடு. நமது பன்முக பொருளாதார வளர்ச்சியால் தான் பல உலக நாடுகள் நம்மை பாராட்டுகின்றன. உலகையே மாற்றுகிறது இந்தியா என்கிறார் பிரெஞ்சு அதிபர் மேக்ரோன். உலகப் பிரசித்திபெற்ற IPsos என்ற ஆய்வமைப்பு கடந்தவாரம் [மார்ச் இறுதியில்] ஜனநாயக உலகில் 29 முக்கிய நாடுகளில் கருத்து கணிப்பு செய்தது. அதில் ஒன்று அந்த 29 நாடுகளில் எந்தெந்த நாடுகள் சரியான திசையில் செல்கின்றன, எந்தெந்த நாடுகள் தவறான திசையில் செல்கின்றன என்ற கணிப்பு. அதில் 77% பேர் பாரத நாடு சரியான திசையில் செல்கிறது என்றும் அதற்கு நேர்மாறாக 65% பேர் அமெரிக்கா 72% ஜெர்மனி 70% கனடா, 79% இங்கிலாந்து 82% பேர் பிரான்ஸ் தவறான திசையில் செல்கின்றன என்று கூறியது. அதன் அடுத்த கணிப்பு அந்த 29 நாடுகள் நமது பொருளாதாரம் தான் பிரகாசமாக இருப்பதாக நம்புவதாகக் கூறியது. 

தாராளவாதிகள் சதி

இப்படி பன்முக வளர்ச்சியுடனும் பெருமையுடனும் எழுச்சி பெற்று வரும் பாரதத்துக்கு அடிப்படை பிரதமர் மோடியின் தலைமை என்பதை உலகமே ஏற்கிறது. 1950-கள் முதல் உலக கட்டமை தன் கையில் வைத்திருந்த மேற்கு நாடுகளின் ஆளுமை, முதலில் கரோனா, பிறகு உக்ரைன் போர் காரணமாக கலகலத்துவருகிறது என்று ஹென்றி கிஸ்ஸிங்கர் போன்ற அறிஞர்கள், ஜார்ஜ் சோரோஸ் போன்ற செல்வாக்குள்ள பணமுதலைகள் அங்கலாய்க்கிறார்கள். உக்ரைன் போரில் மோடி எடுத்த துணிவான முடிவால் சர்வதேச அரசியலில் மேற்கு நாடுகளின் செல்வாக்கு குறைந்து, நடுநிலை நாடுகளின் செல்வாக்கு கூடியிருக்கிறது. இது கடந்த 2 ஆண்டுகளில் உலக அரசியலில் நிகழ்ந்த பெரும் மாற்றம். இன்று 13% சதவிகித மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஜனநாயக [மேற்கு] நாடுகள், பாரதத்துடன் பன்முக நல்லுறவு இல்லாமல் எதேச்சதிகார சீனாவை எதிர்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்திருப்பது வெளிப்படை. டோக்லாம் முதல் லடாக் வரை சீனாவின் மிரட்டல்களை பாரதம் எதிர்கொண்ட விதமும், எல்லையில் நமது ராணுவ தயாரிப்புகளும் சீனாவை எதிர்க்கத் தயங்கும் மேற்கு நாடுகளுக்கு பிரமிப்பூட்டியது. எனவே சீனாவை எதிர்கொள்ள, ரஷ்யா, இஸ்லாமிய நாடுகள், தென்னுலக நாடுகள் தவிர, ஜப்பான், கொரியா, தைவான், மற்ற ஆசிய நாடுகள், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுடனும் மிகநெருக்கமான உறவு கொண்டிருக்கிறது பாரதம். எனவே நம்முடன் ஆழ்ந்த உறவு அவசியம் என்று நினைக்கிறது அமெரிக்கா, மற்ற மேற்கு நாடுகள். பாரதம் இன்று உலக அளவில் பஞ்சாயத்து செய்யும் அறவலிமை பெற்ற நாடாகியிருக்கிறது. உக்ரைன் போரில் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் செய்யும் என்று அஞ்சிய அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச நம்மை அண்டியது. இன்று ரஷ்ய அதிபருடனும் உக்ரைன் அதிபருடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறார் மோடி.

பாரதம் வேண்டும், மோடி வேண்டாம்

நமது செல்வாக்கு, உலகை தன்னிச்சையாக ஆளுமை செய்துவந்த மேற்கத்திய தலைவர்கள் ஊடகங்கள், அறிவு ஜீவிகள், சிந்தனை அமைப்புகள் கண்களை உறுத்துகிறது. உலகில் தங்கள் செல்வாக்கு தொடர அவர்களுக்கு பாரதம் அவசியம். ஆனால், அது அவர்கள் செல்வாக்குக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். தங்கள் விருப்பப்படி பாரதத்தை நடக்கவைப்பது அவர்கள் நோக்கம். அவர்கள் நோக்கத்துக்கு ஒரே தடை மோடி தலைமை தான். தங்கள் செல்வாக்கை மீறி ஏழுச்சி பெற்ற மோடி தலைமையை அவர்கள் விரும்பவில்லை. வரும் தேர்தலில் சுதந்திரமாக இயங்கும் தேசியவாதியான பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறக்கூடாது என்று மேற்கத்திய ஊடகங்கள் அறிவுஜீவிகள் சிந்தனைக்கூடங்கள் பணமுதலைகள் தீவிரமாக இருக்கிறார்கள்.மேற்கத்திய தாராளவாதிகள் மோடியை எதிர்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. மனம்போன படி வாழலாம் என்பதை வாழ்க்கை தத்துவமாக்கிவிட்ட தாராளவாத மேற்கத்திய நாடுகளுக்கு ஆசியா மற்றும் தென்னுலக நாடுகளின் [Global South] கலாச்சார எழுச்சி சவாலாகியிருக்கிறது. மற்ற கலாச்சாரங்களை தாழ்வுபடுத்தி கடந்த 70 ஆண்டுகளில் உயர்ந்த மேற்கத்திய ஆளுமை இப்போது குறைவதால் உலகம் முழுவதும் கலாச்சார உணர்வுகள் பீறிட்டு எழுச்சி பெறுகின்றன. தங்கள் பண்டைய கலாச்சாரத்தை அழிக்க கலாச்சார புரட்சி செய்த சீனா வின் இன்றைய அதிபர் ஷி ஜின்பிங் 5000 ஆண்டு சீன கலாச்சாரத்தின் பெருமையை பேச ஆரம்பித்திருக்கிறார். 

மோடியின் எழுச்சி பண்டைய பாரத கலாச்சாரத்தின் எழுச்சி என்பது வெளிப்படை. உலக மக்கள் தொகையில் 6-ல் ஒரு பங்குடன், பொருளாதரம், ராணுவம், தொழில் நுணுக்கம், அறிவியல் அனைத்திலும் வளர்ச்சி பெரும் பாரதத்தின் கலாச்சார எழுச்சி மேற்கத்திய தாராளவாதத்துக்கு ஆபத்து. அதனாலும் தாராளவாதிகள் உலகம் அவரைக் குறிவைக்கின்றனது. தங்கள் குறுகிய மோடி துவேஷ அரசியல் காரணங்களுக்காக துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டு எதிர்க்கட்சிகளும் அவர்களுடன் சேர்ந்து மோடியை வீழ்த்த வியூகம் வகுக்கிறார்கள்.

எனவே இந்த நாடாளுமன்ற தேர்தல் முன்போல அல்லாமல் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தலாக மாறியிருக்கிறது. நம் நாட்டளவில் யார் தலைவர் என்பதை மட்டும் முடிவு செய்யாமல், உலக அளவில் மோடியின் தலைமை, நமது நாட்டின் ஆளுமை, தொடர வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்யும் தேர்தல் இது. இதில் மோடியின் வெற்றி உலக அளவில் நமது நாட்டின் வெற்றி, நம் கலாச்சாரத்தின் வெற்றி என்று உலகம் கருதும் என்பதை நமது வாக்காளர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

எஸ் குருமூர்த்தி

Note to the Reader: This article originally appeared in Thuglak Tamil Weekly Magazine www.gurumurthy.net. It has been reproduced in Asianet News Network.

Tap to resize

Latest Videos

click me!