மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேகலாயாவில் உள்ள 59 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்தது. அதன்படி இன்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆனால், முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சிதான் அதிக இடங்களில் முன்னிலைபெற்றுள்ளது. கான்ராட் சங்மாவின் கட்சி தனிப்பெரும் கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்துள்ளதேத் தவிர பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி, 25 இடங்களில் முன்னிலையுடன் நகர்கிறது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகிறது.
2வது இடத்தில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களில் முன்னிலைபெற்றுள்ளது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலா 5 இடங்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 3 இடங்களில் மட்டும் முன்னிலையில் உள்ளன.
இதனால் தேர்தல் முடிவுக்குப்பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை அமையும். இதனால் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சியைத்தான் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார்.
அப்போது கான்ராட் சங்மா எந்தக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சிஅமைக்க கான்ராட் சங்மா வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! திப்ரா மோத்தா கட்சிக்கு வலைவீசும் பாஜக
தேர்தலுக்குப்பின் முதல்வர் கான்ராட் சங்மா பேசுகையில் “ மாநிலத்தில் தொங்கு சட்டசபைஅமையும் எனக் கருத்துக்கணிப்புகள் வந்துள்ளன. ஆனால், மாநிலத்தின் நலனில் அதிகமான அக்கறையுள்ள கட்சியுடன்தான் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்குடன் வளர்ந்துவரும் பாஜகவுடன் கான்ராட் சங்மா கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து கான்ராட் சங்மா வெளியேறினார்.
அந்தக் கசப்பான உணர்வோடு மீண்டும் பாஜகவுடன் கான்ராட் சங்மா சேர்மாட்டார். மாறாக திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இதர கட்சிகளை அழைத்து கான்ராட் சங்மா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டில் பாஜக வெறும் 2 இடங்களில் வென்று, என்பிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. கடந்த முறை போல் இந்த முறை நடக்குமா எனத் தெரியவில்லை.
முதல்வர் கான்ராட் சங்மா இன்று அளித்த பேட்டியில் “ பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்கள் தேவை. எந்த முடிவும் எடுக்கு முன், இறுதி முடிவுகள் வரும்வரை பொறுத்திருப்போம். எங்கள் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.அவர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.” எனத் தெரிவி்த்தார்