பெட்ரோல் – டீசல் விலை உயர்வு !! பஸ், லாரி கட்டணம் கடுமையாக உயரப்போகுது !! அத்தியவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் !!

By Selvanayagam PFirst Published Jul 9, 2019, 8:52 AM IST
Highlights

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு  காரணமாக  ஆம்னி பஸ், வாடகை லாரி கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அத்தியாவசிப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் ஆபத்தும் உருவாகியுள்ளது. 

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல்-டீசல் மீது சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக பெட்ரோல்-டீசல் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் கடந்த 5-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசும், டீசல் விலை 2 ரூபாய் 58 காசும் விலை அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 76 காசுக்கும், டீசல் 70 ரூபாய் 48 காசுக்கும் விற்பனை ஆனது.

நேற்று பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து விற்பனையானது. எனினும் பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்வால் அவற்றின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தனியார் பஸ்களில் பயண கட்டணம், லாரி, ஆட்டோ வாடகை கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆம்னி பஸ், வாடகை லாரி, ஆட்டோ சங்கங்கள் விரைவில் முக்கிய முடிவை எடுக்க உள்ளன. 

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசும்போது,  சுங்க வரி கட்டண உயர்வு, வாகன உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் போக்குவரத்து தொழில்கள் கடும் சாவலை எதிர்நோக்கி வருகின்றன. 

இத்தகைய சூழ்நிலையில் பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்வு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போன்று அமைந்துள்ளது என குறிப்பிட்டார்.

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றால் ஆம்னி பஸ்களில் பயண கட்டணம் 10 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்தார்.. 

click me!