
இந்தியாவில் மரண தண்டனை விதிப்பது 81 சதவீதம் அதிகரிப்பு ஆம்னெஸ்டி அமைப்பு தகவல்
இந்தியாவில் மரண தண்டனை விதித்திருப்பது 81 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
புள்ளி விவரங்கள்
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு ஆண்டுதோறும் மரண தண்டனை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு வெளியிடப்பட்ட அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 136 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2015-ல் 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் மரண தண்டனை விதிப்பது என்பது கடந்த ஆண்டு 81 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இருப்பினும், ஒரு தண்டனை கூட கடந்த ஆண்டு நிறைவேற்றப்படவில்லை.
400 கைதிகள்
இந்தாண்டு இறுதிக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய கைதிகள் 400 பேர் இந்திய சிறைகளில் உள்ளனர். கடத்தல் குற்றங்களுக்கு புதிய சட்டங்கள் மரண தண்டனை விதிப்பதுதான் இந்த உயர்வுக்கு காரணம். பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் மட்டும் 73 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015-ல் 320 பேர் தூக்கிலிடப்பட்டு இருந்தனர். போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், குவைத், லாவோஸ், மலேசியா, சவூதி அரேபியா, சிங்கப்பூர், லங்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
சீனா முதலிடம்
கடந்த 2016-ல் 23 நாடுகளில் 1,032 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2015-ல் 25 இந்த எண்ணிக்கை 1,634 ஆக இருந்தது. அதிக மரண தண்டனை நிறைவேற்றும் நாடுகளில் சீனா முதலிடத்திலும், ஈரான் 2-வது இடத்திலும், சவூதி அரேபியா, ஈராக், பாகிஸ்தான் ஆகியவை அதற்கடுத்த இடங்களிலும் உள்ளன. சீனாவில் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான காரணங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.