பாஜக எம்.பி.க்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை...

First Published Aug 1, 2017, 7:47 PM IST
Highlights
amithsha warring to bjp mps


மாநிலங்களவை கூட்டத்துக்கு பாஜக எம்.பி.க்கள் வருகை தராததற்கு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைக்கு வராத உறுப்பினர்கள் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவின் எம்.பி.க்கள் கூட்டம் கட்சி தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் விதம், எதிர்க்கட்சிகளை அணுகும் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மாநிலங்களவையில் ஒருசில சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானங்களை கொண்டு வந்தன. இவை 74-52 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றன.

இதற்கு பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு வராததே முக்கிய காரணம். மாநிலங்களவையில் அக்கட்சிக்கு 56 உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் உள்பட 88 பேர் அக்கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். இருப்பினும், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது அதிர்ச்சியை ஏற்டுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து நேற்று நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநிலங்களவைக்கு வராத உறுப்பினர்களை அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் கூறியதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். இதுபோன்று மீ்ண்டும் நடக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வராத உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித் ஷா எச்சரித்தார்.

குடியரசு தலைவர் தேர்தலின்போது கட்சி எம்பிக்கள் சிலர் செல்லாத வாக்குகளை செலுத்தினர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்றும், வாக்குகளை சரியாக செலுத்த வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார். இவ்வாறு அனந்த குமார் கூறினார். இதற்கிடையே, மாநிலங்களவைக்கு வராத எம்பிக்கள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அசாம் வெள்ள சேதத்தை பார்வையிட சென்றதால் பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!