கலாச்சாரத்தை சீரழித்த கம்யூனிஸ்ட் அரசு; ஊழலின் குகையாக திகழும் கேரளா! பினராயி விஜயனை பின்னி பெடலெடுத்த அமித்ஷா

By karthikeyan VFirst Published Mar 24, 2021, 10:21 PM IST
Highlights

கேரளா சட்டமன்ற தேர்தலையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்த பரப்புரையில், கேரளாவில் நடந்த முக்கியமான ஊழல்களை சுட்டிக்காட்டி, அதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பல அடுக்கடுக்கான அதிரடி கேள்விகளை எழுப்பினார் அமித் ஷா.
 

கேரள சட்டமன்ற தேர்தலையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். காஞ்சிராப்பள்ளி, சாத்தனூரில் செய்த பரப்புரையில் அவர் பேசிய முக்கியமான சில விஷயங்களை பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் உள்ள பாஜக அரசாங்கம் கேரளாவின் வளர்ச்சிக்கு உறுதியளித்துள்ளது. பிரதமர்  மோடி தலைமையில், முழு நாடும் வளர்ச்சி பாதையில் முன்னேறிச் செல்கிறது. ஆனால் கேரளாவிலோ ஊழல் மிக அதிகமாக உள்ளது.

கேரளாவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மூத்த அதிகாரியான ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்துள்ளார். இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி(யுடிஎஃப்) கேரளாவின் முன்னேற்றத்திற்காக செயல்பட முடியாது; பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதால்தான் ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சீரழிக்கிறது. எல்.டி.எஃப் அரசாங்கம் சபரிமலை கோவிலில் ஐயப்ப பக்தர்களை கையாண்ட விதம் மோசமானது. விஜயன் ஜி, கோவில்கள் தொடர்பான விவகாரங்களை பக்தர்களிடத்திலேயே விடுவதுதான் சரியானது என்று பாஜக நம்புகிறது. அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்றார்.

கேரளாவில் நடந்த முக்கியமான ஊழல்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல அடுக்கடுக்கான அதிரடி கேள்விகளை எழுப்பினார். 

ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள் கேரளாவை ஊழலின் குகை ஆக்கியது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சூரிய ஒளி மோசடியை பார்த்தோம். கம்யூனிஸ்ட் அரசு சக்தி, டாலர் மற்றும் தங்க மோசடிகள் செய்தது.

பினராயி விஜயன் தலைமையிலான கம்யூன்ஸ்ட் அரசு முழு அரசாங்க இயந்திரங்களையும் தனது அரசியல் பணியாளர்களாக மாற்றியுள்ளது. இந்த இடதுசாரி கட்சிகள் தங்கள் கட்சி உறுப்பினர்களை அரசாங்க வேலைகளில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 

தங்க முறைகேடு வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் கேரளாவில் அலுவலக பணியில் இருந்தாரா? அவருக்கு அதில் தொடர்பிருக்கிறதா என்பதை கேரள முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் அரசாங்கம் இந்த பிரதான குற்றவாளிக்கு மாத சம்பளத்தை ரூ .3 லட்சம் வழங்கியதா? வேறு கட்சியை சேர்ந்தவர் முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்திருப்பார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விஜயனுக்கு அந்த அசிங்கமெல்லாம் இல்லை.

தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண், கேரள முதல்வர் அலுவலகத்திற்கு அடிக்கடி ஏன் வந்தார் என்பதை பினராயி விஜயன் தெளிவுபடுத்த வேண்டும். தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண், கேரள அரசாங்கத்தின் செலவில் தான் வெளிநாடுகளுக்கு சென்றாரா? உங்கள் தலைமை செயலாளர் தான் அனுமதியளித்தாரா? என்பதையெல்லாம் தெளிவுபடுத்துங்கள். 

விஜயன் ஜி, அமலாக்கத்துறை மற்றும் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் உங்களுக்கு தெரியுமா? அவை தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட்டதா? என, கேரள முதல்வர் பினராயி விஜயனிடமிருந்து பதில்கள் வர வாய்ப்பில்லாத பல கேள்விகளை அமித் ஷா எழுப்பினார்.
 

click me!