
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளில், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
சம்பதா என்ற புதிய திட்டம் மூலம் வேளாண் துறையை நவீனமாக்க ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் தொடர்பாக திருத்தம் கொண்டு வர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விஜயவாடா விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து அளிக்கவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வாராக்கடன் பிரச்சினைகளுக்கு தீர்வவாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.