
தெலங்கானா மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் இன்டர்மீடியேட்(பிளஸ்-2) வரை தெலுங்கு மொழிப்பாடம் அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் இன்டர்மீடியேட் வரை தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயமாக வேண்டும் என ஆய்வுக்குழு பரிந்துரை செய்து இருந்து. இதை மாநில முதல்வர் சந்திரசேகர் ராவும் வலியுறுத்தி இருந்தார்.
அந்த பரிந்துரைகள் குறித்து முடிவு எடுக்க துணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான கடியம் ஹரி தலைமையில் கூட்டம் நேற்று நடந்தது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநிலத்தில் தற்போது 1,370 பள்ளிகளில் தெலுங்கு மொழி மாணவர்களுக்கு கற்பிக்கப்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டு முதல் தாய்மொழியான தெலுங்கு , ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-டூ வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களிலும் கட்டாய பாடமாக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், தெலுங்கு தெரியாத மாணவர்களுக்கு சிறப்பு பாடப்புத்தகங்களும், தெலுங்கு மொழியை முதல்முறையாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பாடப்புத்தகங்களும் பிரத்யேகமாக வழங்கப்படும்.
மாநில அரசின் இந்த உத்தரவு தெலங்கானாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளுக்கும் பொருந்தும். அந்தப் பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்த உத்தரவை பின்பற்றாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், மாநிலத்தில் பள்ளி செயல்பட அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.