
2018ம் ஆண்டு முதல் உள்நாட்டு விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஆதார் எண் அடிப்படையில் சோதனை செய்யும் திட்டத்தை இந்திய விமான நிலைய அணையம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக கொல்கத்தா, அமதாபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் ஆதார் எண் விவரங்கள் அனைத்தும் விமானநிலையத்தில் பதிவுசெய்யப்படும் அதன் அடிப்படையில் பயணிகள் சோதனை செய்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் விமானநிலையத்துக்குள் நுழையும் போது, தங்களின் “பயோமெட்ரிக்” அடையாளங்களை பதிவு செய்தவுடன் , விமான எண், பயணிக்கும் நேரம், முகவரி, டிக்கெட் விவரங்கள் உள்ளிட்டவை தெரியவரும். இதன்அடிப்படையில் விமானநிலையத்தில் பாதுகாப்பில் இருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு பயணிகளை அனுமதிப்பார்கள்.
இதன்மூலம் பயணிகளுக்கு அடையாள அட்டை கொண்டு வருதல், டிக்கெட் எடுத்து வருதல், போர்டிங் பாஸ் பெறுதல் போன்றவை தேவையில்லை. விமானக் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே ஆதார் எண் மட்டும் அளித்தல் போதுமானது.
இது குறித்து இந்திய விமானநிலைய ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொகாபத்ரா கூறுகையில், “ விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆதார் எண் விவரங்களை அளித்தால், அனைத்து சோதனைகளுக்கும் ஆதார் எண் ஒன்றுமட்டுமே போதுமானது. விமானநிலைய நுழைவு வாயில், இ-கேட் ஆகியவற்றில் ஆதார் தொடர்பான பயோமெட்ரிக் விவரங்களை மட்டும் பதிவுசெய்தல் போதுமானது. ஆதார் விவரங்களை பதிவு செய்தவுடன் பயணியின் விவரம், விமானத்தின் பெயர், டிக்கெட் விவரம் அனைத்தும் தெரியவரும். அதன்பின் இ-கேட் திறக்கப்பட்டு பயணிஅனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.