
இந்து மத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்து கடவுள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாடமெடுத்த அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரி பிரிவில் பேராசிரியராக டாக்டர் ஜிதேந்திரா குமார் பணியாற்று வருகிறார். இந்த பல்கலைகழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மேலும் ஜவஹர்லால் நேரு மருத்துவப் பல்கலை.யின் தடயவியல் ஆய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராக டாக்டர் ஜிதேந்திரா குமார் பணியாற்றுகிறார். இவர் நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாடம் எடுக்கையில் பேசிய உரையில், பாலியல் பலாத்காரத்திற்கு இந்துக்களின் கடவுளை உதாரணமாகக் காட்டியதாகத் தெரிகிறது. இதனையடுத்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக வகுப்பில் நடந்துகொண்டதாக கூறி மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னதாக உதவிப் பேராசிரியர் ஜிதேந்திரா குமாரிடம் 24 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து விசாரணை செய்ய 2 பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இச்சூழலில், ஜிதேந்திரா தனது நடவடிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர் மீது முதல்கட்ட நடவடிக்கையாக அவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதுக்குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுபோன்ற நிகழ்வுகளை பல்கலைக்கழகம் ஒருபோதும் ஏற்காது. இது தொடர்பாக பேராசிரியர் 24 மணிநேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதை விசாரிக்க இரு நபர் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளோம். பேராசிரியர் ஜிதேந்திர குமார் சம்பவம் தொடர்பாக நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பேசிய உரையில், ’இந்திய புராண கதைகளில் பாலியல் வன்புணர்வு' என்ற தலைப்பில் ஸ்லை்ட் ஷோ வகுப்பு எடுத்துள்ளார். அதில், பிரம்மா, இந்திரன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர் என்ற கருத்தில் பாடம் எடுத்தாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ஜிதேந்திராவை மாணவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
இதுக்குறித்து புகாருக்குள்ளான பேராசிரியர் அலிகார் பல்கலைகழக துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில், எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினரின் மத உணர்வுகளையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல, பலாத்காரம் நம் சமூகத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதை முன்னிலைப்படுத்த மட்டுமே இது செய்யப்பட்டது" என்று கூறியுள்ளார். இது கவனக்குறைவாக நடந்த தவறு என்றும், "எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காது" என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அதே போல் அண்மையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகக்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ராமர் மற்றும் சீதையின் படத்தில், ராமரின் இடத்தில் தனது படத்தையும், சீதையின் இடத்தில் தனது மனைவியும் வைத்து கண்காட்சியில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.