
சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் போட்டோ பதித்த ஸ்கூல்பேக்குகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க பா.ஜனதா கட்சியின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதித்துள்ளார்.
தேர்தல் அறிவுப்புக்கு முன் இந்த ஸ்கூல்போக்குகள் லட்சக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு, இருப்பில் வைக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாரதியஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் போட்டோ பதித்த பேக்குகளை இலவசமாக வழங்க அரசு சம்மதிக்குமா என அதிகாரிகள் தயங்கினர்.
இது குறித்து அதிகாரிகள் முதல்வர் ஆதித்யநாத்துக்கு எடுத்துக்கூறினர். ஆனால், அதற்கு முதல்வர் ஆதித்யநாத் எந்தவிதமான தடையும் கூறாமல் முன்னாள் முதல்வர் புகைப்படம், சமாஜ்வாதி கட்சியின் வாசங்கள் அடங்கிய பதித்த ஸ்கூல்பேக்குகளை மாணவர்களுக்கு வழங்க அனுமதி அளித்தார்.
ஏறக்குறைய இந்த ஸ்கூல்பேக்குகள் 23 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வி துறையின் இயக்குநர் அப்துல் முபின் கூறுகையில், “ முந்தைய அகிலேஷ் ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட பைகளை வினியோகம் செய்யலாம் என முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அவர் தடை ஏதும் கூறவில்லை. இதையடுத்து, அனைத்து கல்வி வட்டங்களுக்கும் இது தொடர்பான உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ரேபரேலி நகரின் கல்வி அதிகாரி சந்தனா ராம் இக்பால் யாதவ் கூறுகையில், “ ஏறக்குறைய 35 ஆயிரம் ஸ்கூல் பேக்குகள், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் படம், சமாஜ்வாதி கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்டு எங்களுக்கு வந்துள்ளன. இதை மாணவர்களுக்கு வழங்கக் கோரி உத்தரவு வந்துள்ளது” என்றார்.