
அயோத்தி நிலப் பிரச்சினையில் உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியமும் அகில பாரதிய அகதா பரிஷத் அமைப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தத்தை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக, இரு அமைப்புகளின் தலைவர்களும் தெரிவித்தனர்.
அயோத்தியில் மசூதி இல்லை
இதுகுறித்து வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறும்போது, “அயோத்தி அல்லது பைசாபாத்தில் புதிய மசூதி கட்டுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.
இதற்கு பதிலாக, மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை அடையாளம் கண்டு அரசுக்கு தெரிவிப்போம்” என்றார்.
உடன்பாடு
இதுகுறித்து அகதா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி கூறும்போது, “அயோத்தியில் மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
இந்தப் பிரச்சினைக்கு ஷியா வக்பு வாரிய தலைவர் ரிஸ்வியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது” என்றார்.
நீதிமன்றம் தீர்ப்பு
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்து அமைப்பினரால் கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான மனுக்களை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சரிபங்காக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ல் தீர்ப்பு வழங்கியது.
டிசம்பர் 5-ல் விசாரணை
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளக் கோரி, உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 5-ம் தேதி இறுதி வாதம் தொடங்கும் என அறிவித்து இருந்தது.