டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியர்களிடம் மோசமாக நடந்து கொண்ட காரணத்தால், வேறு வழியின்றி பயணித்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.25 மணிக்கு லண்டனுக்கு 787 ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. பயணித்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் 9.36 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒரு பயணி தவறான முறையில் ஒழுக்ககேடான வகையில் விமான ஊழியர்களிடம் நடந்து கொண்டார். இரண்டு விமான ஊழியர்களை தாக்கினார். இந்த தாக்குதல் மீண்டும் தொடர்ந்து லண்டன் வரை நீடிக்கக் கூடாது என்பதால் மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கு விமானம் திருப்பப்பட்டது. போலீசாரிடம் தவறாக நடந்து கொண்ட பயணி ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு விமானத்தில் எழுத்து மற்றும் வாய்மொழியாக எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால், கேட்பதாக இல்லை. விமான ஊழியர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டார்'' என்றனர்.
தொடர்ந்து சமீப நாட்களில் விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பயணிகளும் அவ்வப்போது இதுகுறித்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்தாண்டும் இதுபோன்று ஏர் இந்தியா விமானத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்து இருந்தன. பயணி ஒருவர் மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்து இருந்தார். மற்றொரு சம்பவத்தில் பயணியின் காலி இருக்கையில் உடன் பயணித்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்து இருந்தார். இந்த இரண்டு சம்பவங்களிலும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சரியான நடவடிக்கை மேற்கொள்ளாத ஏர் இந்தியா விமானத்திற்கு டிஜிசிஏ அபராதம் விதித்து இருந்தது. இதையடுத்தே, இன்று நடந்த சம்பவத்திற்குப் பின்னர், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்ட விமானப் பயணி உடனடியாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் பேட்டியளித்து இருந்த ஏர் இந்தியா விமானத்தின் எம்டி - சிஇஓ கேம்ப்பெல் வில்சன், ''போதையில் சில பயணிகள் இதுபோன்று அடிக்கடி விமானத்தில் நடந்து கொள்கின்றனர். சிலர் குடித்துவிட்டு விமானத்தில் ஏறுகின்றனர். சிலர் வரி இல்லை என்ற காரணத்தினால், மதுபான வகைகளை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறுகின்றனர். அப்படி வரும் பயணிகள் விமான ஊழியர்களிடம் அதிகமாக மது வழங்குமாறு கேட்கின்றனர். அவ்வாறு வழங்காதபோது, விமான ஊழியர்களுக்கு அதுமாதிரியான பயணிகள் மிரட்டல் விடுகின்றனர். சில நேரங்களில் தாக்குதலையும் நடத்துகின்றனர். இதுபோன்று பல்வேறு புகார்கள் தினமும் எங்களுக்கு வருகிறது'' என்று தெரிவித்து இருந்தார்.