
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கி இந்தியா திரும்பியுள்ள விமானப் படை அதிகாரி அபிநந்தன் மீண்டும் போர் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து போர்ப்படை தளபதி பி.எஸ். தனோவா பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா இன்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அபிநந்தன் மீண்டும் போர் விமானத்தில் பறப்பாரா, இல்லையா? என்பது குறித்து அவரது உடல்தகுதியை முழுவதும் பரிசீலித்தபிறகே சொல்லமுடியும் . பாரசூட்டில் இருந்து கீழே குதித்த அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் முறையான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அங்கு அவருக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படும். மீண்டும் பணியில் சேர்வதற்கான முழு உடல்தகுதி அபிநந்தனுக்கு உள்ளது என்பது தொடர்பான மருத்துவ சான்றிதழ் எங்களுக்கு கிடைத்தவுடன், அவர் போர் விமானத்தில் பறப்பார்’ என்று தெரிவித்தார்.