மசூதியில் அம்பு எய்வது போல் நடித்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவுக்கு அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக கடவுள் வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம் எனப்படுகிறது. ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். அந்த வகையில், ராம நவமி விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் நடைபெற்றன.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில், ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா கலந்து கொண்டார். அவர்களது ஊர்வலம் மசூதி இருந்த பகுதிக்குள் நுழைந்த போது, மசூதியை நோக்கி வில்லில் இருந்து அம்பு எய்வது போல் பாஜக வேட்பாளர் மாதவி லதா நடித்தார். இதனை கண்டு அங்கிருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.
ராமநவமி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் வலியுறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மசூதியில் அம்பு எய்வது போல் நடித்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவுக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு!
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹைதராபாத் மக்கள் பாஜகவின் நோக்கத்தைப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் கொச்சையான செயல்களை ஏற்க மாட்டார்கள். இதுதான் பாஜக பேசும் வளர்ச்சியடைந்த பாரதமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலை விட ஹைதராபாத் அமைதி பெரியது என்ற அசாதுதீன் ஒவைசி,”தெலங்கானா மாநிலத்தில் அமைதிக்கு எதிரான பாஜகவுக்கு எதிராக தெலங்கானா மக்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.