
சென்னை நகரம் முழுவதும் தெருக்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, ஜிஎஸ்டி சாலை மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த கேமராக்கள் நிறுவப்படுகின்றன.
கடந்த காலங்களில் குடித்து வாகனம் ஓட்டினால் ₹1,000 முதல் ₹1,500 வரை அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிகளின்படி, இத்தகைய குற்றத்திற்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் குற்றம் செய்வோருக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
சீட் பெல்ட் கட்டாமல் வாகனம் ஓட்டும் பழக்கத்திற்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. முந்தைய ₹100 அபராதம் தற்போது ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைல் போனைப் பயன்படுத்தினால், இப்போது ₹5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும். டிரிபிள் ரைடிங் செய்வதற்கும் அபராதம் ₹100 இருந்து ₹1,000 ஆக உயர்ந்துள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவது, கழிவுகளை பிரிக்காமல் இடுவது, கால்நடைகளை சாலையில் விடுவது போன்ற குற்றங்களுக்கு நேரில் அபராதம் விதிக்கிறது. இதற்காக 468 பாயின்ட் ஆஃப் சேல் (PoS) கருவிகள் வாங்கப்பட்டு, அதன் மூலம் ₹5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குப்பை தொடர்பான சட்டங்களை மீறியதற்காக ₹17.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதை கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் 15 பறக்கும் படை வாகனங்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அபராத தொகைகளை UPI, டெபிட்/கிரெடிட் கார்டு, டி.டி. அல்லது காசோலையால் செலுத்தலாம். இதன் மூலம் பணம் நேரடியாக மாநகராட்சிக்கு செல்வதால் ஊழல் வாய்ப்பு குறைய உள்ளது.