மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ராணுவத்துக்கான புதிய ஆள்சேர்ப்புத் திட்டமான அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளில் எவ்வளவு ஊதியம் பெறுவார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது
ராணுவத்தில் புதிய ஆள்சேர்ப்புத் திட்டமான அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்தத் திட்டத்தில் 17 வயது முதல் 23 வயதுள்ளவர்கள் வரை சேரலாம். இந்த திட்டத்தில் ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய 3 பிரிவுகளிலும் இளைஞர்கள் சேர்ந்து பணியாற்றி 6 ஆண்டுகளுக்குப்பின் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு வழக்கமான ராணுவ வீரர்களைப் போன்று ஓய்வூதியப் பலன்கள் ஏதும் கிடைக்காது.
ஆனால், பணிக்காலத்தை 15 ஆண்டுகளுக்குத் தொடர விரும்புவோர் விருப்பம் தெரிவித்து எழுதிதத் தர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் 40ஆயிரம் பேரில் 25 சதவீதம் பேர் நிரந்தர சேவைக்கு எடுக்கப்படுவார்கள். அதில் தகுதியின் அடிப்படையில் சிறந்த வீரர்கள் மட்டுமே நிரந்தரமாக்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம்பேர் விடுவிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு சான்றிதழ், தொகுப்பு நிதி போன்றவை கிடைக்கும். அடுத்ததாக உயர்கல்வி பயிலவும், புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் மத்திய அரசு வாய்ப்பு வழங்கும். மத்திய துணை ராணுவப்படையிலும் சேர்க்கவும் பரிந்துரைக்கப்படுவார்கள், மாநில போலீஸ் துறையிலும் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை உண்டு.
அக்னிபாத் திட்டத்தில் சேரும் அக்னிவீரர்களுக்கு மாத ஊதியம் எவ்வளவு?
அக்னிபாத் திட்டத்தில் சேரும் அக்னி வீரர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இதில் ரூ.9ஆயிரம் பிடிக்கப்பட்டு ரூ.21 ஆயிரம் தரப்படும். இந்த ரூ.9ஆயிரம் வீரர்களின் சேமிப்புக்காக வைக்கப்படும், அதே அளவு தொகையை மத்திய அரசும் செலுத்தும். 4 ஆண்டுகள் முடித்துச் செல்லும்போது, ஒவ்வொரு வீரரும் தலா ரூ.11.77 லட்சம் பெறுவார்கள். இ்ந்தத் தொகைக்கு வருமானவரி பிடித்தம் இல்லை, இது சேவை நிதி என அழைக்கப்படும்.
2-வது ஆண்டில் ரூ.33 ஆயிரம் மாதம் ஊதியம் பெறுவார்கள். இதில் 30 சதவீதம் சேவை நிதிக்கு பிடிக்கப்படும். 3-வது ஆண்டில் மாதம் ரூ.36,500 ஊதியமும், 4-வது ஆண்டில் ரூ.40ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். அக்னிபாத் வீரர்களுக்கு ரூ.48 லட்சம் இலவசக் காப்பீடு வழங்கப்படும்.
அக்னிபாத் திட்டத்தை வகுக்க காரணம் என்ன
ராணுவத்தில் நீண்டகாலமாக பழமையான முறையில் ஆட்தேர்வு நடந்து வருகிறது. இதை புதுப்பிக்கவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த 3 பிரிவுகளிலும் சேரும் வீரர்களின் வயதுவிவரத்தை மேம்பட வைக்கும். சராசரி வயது 32லிருந்து 26ஆகக் குறையும். கடந்த 2 ஆண்டுகளாக ஆலோசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ராணுவத்தின் 3 பிரிவுகளிலும்இருக்கும் தளபதிகள் இந்தத் திட்டத்தின் மீது வலிமையான நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அரசுக்கு நிதிச்செலவு குறையும், ராணுவத்தை நவீனப்படுத்த முடியும்.