தோல்வியை மறுக்கும் பாஜக முதல்வர்..! மீண்டும் ஆட்சி அமைப்பதாக அதிரடி..!

By Manikandan S R SFirst Published Dec 23, 2019, 1:52 PM IST
Highlights

ஜார்க்கண்டில் பாஜக தலைமையில் தான் மீண்டும் ஆட்சி அமையும் என முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

இதனால் ஜார்க்கண்டில் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 24 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், ஆர்.ஜே.டி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 28 இடங்களில் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது. ஜே.வி.எம் கட்சி 3 இடங்களிலும் மற்ற கட்சிகள் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் பெற வேண்டிய நிலையில் காங்கிரஸ் கூட்டணி தற்போது அதை எட்டியுள்ளது.

எனினும் மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என முதல்வர் ரகுபர் தாஸ் கூறியிருக்கிறார். தற்போது வந்திருப்பது இறுதியான முடிவுகள் இல்லை என்றும் இன்னும் ஏராளமான சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாகவும் ரகுபர் தாஸ் கூறியுள்ளார். முடிவுகள் பற்றி தற்போது பேசுவது சரியாக இருக்காது என்ற அவர் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் பாஜக தலைமையில் தான் அடுத்த ஆட்சி எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2014 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ரகுபர் தாஸ் முதல்வராக பதவி ஏற்றார். ஜார்க்கண்டில் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவியை நிறைவு செய்த நிலையில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தற்போது அக்கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு ஜார்க்கண்ட் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

click me!