எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தம்.. பலத்த பாதுகாப்பு... டெல்லி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரம்...!

By Kevin KaarkiFirst Published May 10, 2022, 12:12 PM IST
Highlights

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது என கூறி மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. 

டெல்லி மாநிலத்தின் நியூ பிரெண்ட்ஸ் காலனி மற்றும் மங்கோல்புரி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர்கள் அந்த பகுதிகளுக்குள் வந்தடைந்தன. 

முன்னதாக ஷாஹீன் பாக் பகுதியில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், இன்று நியூ பிரெண்ட்ஸ் காலனி மற்றும் மங்கோல்புரி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இன்று நடைபெறும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் அலாவட் தடுத்து நிறுத்த முயற்சித்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சட்டமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தம்:

பின் காவல் துறையினர் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் அலாவத்-ஐ தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை துவங்கினர். “இங்கு நிலைமை முழு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்,” என ஆக்கிரமப்புகளை அகற்றும் பணிகள் குறித்து டெல்லி டி.சி.பி. சமீர் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். 

“ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் (ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் அலாவத்) இங்கு வந்து ஜெ.சி.பி.-யை ஏன் பயன்படுத்துகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். ஆக்கிரமப்புகளை அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம்:

டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சட்ட விரோத கட்டிடங்களை இடிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கான பணிகளை நேற்று காலை மேற்கொள்ள அதிகாரிகள் ஆயத்தமாகினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நூற்றுக்கும் அதிகமானோர் அந்த பகுதியில் முற்றுகையிட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

முன்னதாக ஷாஹீன் பாக் பகுதியில் கட்டிடங்களை இடிக்கும் பணிகள், போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஏற்கனவே ஒருமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டும் இன்றி, ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது என கூறி மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. 

click me!