
உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையை தடுத்து நெறிப்படுத்தும் வகையில், சிறப்பு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
முதல்வர் ஆதித்யநாத் ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஜிதேந்திரகுமார் தலைமையில் 9 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்ககல்வி, உயர்கல்வி துறை இயக்குநர், செயலாளர், தனியார் பள்ளிகள் சார்பில் பிரதிநிதி, பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த குழு அவ்வப்போது கூடி விவாதித்து, பள்ளிகள் கட்டணத்தை நெறிப்படுத்துவது குறித்து அறிக்கையை அரசுக்கு அளிக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை, கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணக்கொள்ளை நடக்கிறது என்று முதல்வர் ஆதித்யநாத்துக்கு மக்கள் தரப்பில் புகார்கள் சென்றன.
இதையடுத்து, தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நெறிப்படுத்தும் வகையில் அவசரச்சட்டத்தை அரசு பிறப்பிக்க முடிவு செய்து, வரைவு சட்டத்தை அ ரசு தயாரித்துள்ளது. இதை இணையதளத்திலும் வௌியிட்டு மக்களிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும்.
இந்த சட்டத்தில் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாகக் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற முக்கிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.