
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கி, அதை ரிட்டன் அளிக்கும் போது போலியான பொருட்களை அளித்து ரூ. 70 லட்சம் வரை மோசடி செய்த ‘பலே கில்லாடி’ பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண் அமேசான் நிறுவனத்தின் பொருட்களை தனியா ஒரு போர்ட்டல் மூல் விற்பனை செய்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
பலே கில்லாடி
மேற்குவங்காள மாநிலத்தைச் ேசர்ந்தவர் தீபன்விட்டா கோஷ்(வயது32). திருமணமான இவர் தனது கணவருடன் பெங்களூருவில் உள்ள ஹோரம்மாபகுதியில் உள்ள ராஜன்னா லேஅவுட் பகுதியில் வசித்து வந்தார். இவர் தனியாக ஒரு சேவை நிறுவனத்தையும் நடத்திவந்தார்.
இவரின் முக்கிய வேலையே, ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஏராளமான பொருட்களை ஆர்டர் செய்வார். பொருட்கள் கைக்கு வந்துசேர்ந்த 24 மணிநேரத்தில் சரியில்லை என ரிட்டன் அளிப்பார். ரிட்டன் கொடுக்கும்போது,அதேபோன்ற போலியான பொருட்களை கொடுத்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுகோஷ் மோசடி செய்துள்ளார்.
புகார்
இந்த மோசடி வேலையை கடந்த ஒரு ஆண்டாக கோஷ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இதைக் கண்டுபிடித்த பெங்களுரு அமேசான் நிறுவன பிரதிநிதி தீனுடி நாயர், கடந்த மாதம் 18-ந்தேதி போலீசில் புகார் அளித்தார்.
போலியான பெயரில் டி.வி. செல்போன், விலை உயர்ந்த கேமிரா உள்ளிட்ட 104 பொருட்கள் ஆர்டர் செய்து, அதை 24 மணிநேரத்தில் திருப்பி அளித்து, அதற்குரிட்டன் பணம் கேட்டு விண்ணப்பித்து பணத்தை பெறுவார். ஆனால், பொருட்கள் போலியானதாக இருக்கும் எனத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, போலீசார் நடத்தி தீவிர விசாரணையில் தீபன்விட்டா கோஷ் கைது செய்யப்பட்டார்.
24 மணிநேரத்தில் ரிட்டன்
இது குறித்து பெங்களுரு நகர போலீஸ் துணை ஆணையர் அஜய் ஹிலோரி கூறுகையில், “ அமேசான் நிறுவனத்தை ஏமாற்றிய கோஷ், ஒவ்வொரு முறையும் ஆர்டர் செய்யும் போதும் வெவ்வேறு முகவரியில் கோஷ் ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை பெற்று 24 மணிநேரத்தில் ரிட்டன் அனுப்பி அமேசான் நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெறுவார். அப்போது பொருட்களை பெற வரும் அமேசான் ஊழியரிடம் போலியான பொருட்களை கொடுத்து விடுவார்.
கைது
கடந்த ஒரு ஆண்டாக இதேபோன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனம், கோஷ் ரிட்டன் அளித்த பொருட்கள் போலியானது என்பது தெரிந்து, போலிசில் புகார் அளித்தனர். இதையடுத்து கோஷை தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்தோம்.
தனியாக விற்பனை
மேலும், கோஷ் தனியாக ஒரு ஆன்-லைன் போர்ட்டல் நடத்தி வந்துள்ளார். அதில் அமேசான் நிறுவனத்தில் இருந்து பெற்ற உண்மையான தரமான பொருட்களை தனியாக விற்பனை செய்து வந்துள்ளார். அமேசான் நிறுவனத்திடம் 104 முறை ஆர்டர் செய்து, ஏறக்குறைய ரூ.69 லட்சத்து 91 ஆயிரம் ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.