
உத்தரப்பிரதேச மாநில அரசின் மிகஉயரிய விருதான “யாஷ் பாரதி” விருது தகுதியானநபர்களுக்குதான் கொடுக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய முதல்வர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த உயரிய விருது நடிகர் அமிதாப் பச்சன், நசுரூதீன் ஷா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1994ம் ஆண்டு முலாயம்சிங் முதலாவராக பதவி ஏற்றபோது, மாநிலத்தில் புகழ்பெற்ற நபர்களுக்கு வழங்க யாஷ் பாரதி விருதை அறிமுகப்படுத்தினார். இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதியும், மாதம் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியமும் அளிக்கப்படும்.
ஆனால், அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இந்த விருது தகுதியில்லாத நபர்களுக்கு வழங்கப்பட்டது என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக அமிதாப் பச்சன், அவரின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் ஓய்வூதியம் பெறவில்லை.
மாயாவதி ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விருதை நிறுத்திவிட்டார். மீண்டும் 2012-ல் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்து அகிலேஷ் முதல்வரானவுடன் இந்த விருது வழங்குவது தொடரப்பட்டது. தகுதியில்லாத பல நபர்களுக்கு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விருதுகள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து, மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, பா.ஜனதாவின் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்று அதிரடியான முடிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். நிர்வாகச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில், இதற்கு முன்பு இருந்த முதல்வர்கள் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாரிகளுடன் முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு நடத்தினார். அப்போது, அவர் பேசுகையில், “ யாஷ் பாரதி விருது என்பது, கலை, இலக்கியம், விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படும் விருது.
இதற்கு முன் விருது பெற்றவர்கள் எந்த அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டார்கள், எப்படி தேர்வு செய்தார்கள், யாரெல்லாம் தேர்வுசெய்தது என்பதை ஆய்வுசெய்ய வேண்டும்.
அதில் குறைபாடுகள், தகுதியில்லாத வர்களுக்கு விருது வழங்கப்பட்டு இருந்தால் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். விருதின் மரியாதையையும் மான்பையும் காக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, அமிதாப் பச்சன் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளும் கூட ஆய்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.