
சரக்கு மற்றும் சேவை வரிக்கு(ஜி.எஸ்.டி.) எதிராக ஊடகங்களில் சிலர் பிரசாரம் செய்து வருவது மத்தியஅரசுக்கு எந்த விதத்திலும் நிர்பந்தத்தை, அழுத்தத்தை அளிக்காது என்று நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிபதில் அளித்துள்ளார்.
நாடுமுழுவதும் ஒரே சீரான வரியமைப்பு முறையான ஜி.எஸ்.டி. வரி வரும் ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த ஜி.எஸ்.டி. வரியில்சினிமாவுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை மாதத்துக்கு பின் திரையரங்குகளில் சினமா டிக்கெட்டுகள் விலை கடுமையாக உயரும், சினிமா தயாரிப்புகள் மீது கடுமையான வரிச்சுமை ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது.
இது குறித்து சமீபத்தில் கருத்த தெரிவித்த நடிகர் கமல் ஹாசன், “
மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமாதான் எனது வாழ்க்கை ஆனால், பீடி, சிகரெட்,மதுவுக்குவிதிக்கப்பட்ட வரி போன்று, சினிமாவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிழக்குஇந்திய கம்பெனி அல்ல என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.
சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் இல்லாவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பேட்டி அளித்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிக்கு விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், “ ஊடகங்களைப் பயன்படுத்தி, சிலர் ஜி.எஸ்.டி. வரிக்குஎதிர்ப்புத் தெரிவித்து, அரசுக்கு அழுத்தம் தர முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொரு பிரதிநிதித்துவத்தையும் தீவிரமாக ஆய்வு செய்வோம்.
இதற்குமுன், இருந்த வரிமுறையில் சினிமாவுக்கு 29 சதவீதத்துக்கு அதிகமாக வரி விதிக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஜி.எஸ்.டி.யில் அதைக் காட்டிலும் குறைவாக 28 சதவீதம் மட்டுமே விதிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி.வரி விதிப்பு தொடக்கத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால், நீண்டகாலத்தில் தற்போது விதிக்கப்பட்டு வரும் வரியைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.
ஆதலால், ஊடகங்கள் மூலம் ஜி.எஸ்.டி.க்கு எதிராக பிரசாரம் செய்து, அரசுக்குஅழுத்தும் கொடுக்கும் முயற்சிகள் பலிக்காது. அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது’’ எனத் தெரிவித்தார்.