
நாட்டின் முதன்மை மருத்துவமனையாக எய்ம்ஸ் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 347 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் பழையது, புதியது என மொத்தம் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. தரவுகளின்படி, இந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. ஜோத்ஸ்னா சரந்தாஸ் மஹந்த் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதிலளித்துள்ளார். அதில் உள்ள தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் சுமார் 5,527 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 2,161 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அதில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படாத பணியிடங்களை குறைக்கும் வகையில், 'Mission Recruitment’ எனும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் எம்.ஸ்ரீனிவாஸ் தொடங்கினார். ஆனால், இந்த முன்முயற்சியின் கீழ் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்பட்டது என்பது பற்றிய தரவுகள் எதுவும் பகிரப்படவில்லை.
அதேசமயம், பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பதவிகளுக்கு எதிரான நேரடி ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆண்டுகளில் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் பற்றாக்குறையை மேம்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகள் / நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் 70 வயது வரை பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ராகுல் எதிர்பார்க்கிறாரா? ரவி சங்கர் பிரசாத் கேள்வி!
அமைச்சர் அளித்துள்ள தரவுகளின்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 1207. அதில், 347 பணியிடங்கள் காலியாக உள்ளன. எய்ம்ஸ் கல்யானியில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 259. அதில், 151 பணியிடங்கள் காலியாக உள்ளன. எய்ம்ஸ் மதுரையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 183. அதில், 141 பணியிடங்கள் காலியாக உள்ளன. எய்ம்ஸ் ராய்ப்பூரில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 305. அதில், 115 பணியிடங்கள் காலியாக உள்ளன. எய்ம்ஸ் ராஜ்கோட்டில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 183. அதில், 111 பணியிடங்கள் காலியாக உள்ளன. எய்ம்ஸ் போபாலில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 305. அதில், 109 பணியிடங்கள் காலியாக உள்ளன. எய்ம்ஸ் கவுகாத்தியில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 183. அதில், 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.