ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது: அமலாக்கத்துறை அதிரடி!

By Manikanda Prabu  |  First Published Oct 4, 2023, 7:22 PM IST

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்


முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதன் முடிவில், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இறுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் மனிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சஞ்சய் சிங்கின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. சஞ்சய் சிங், மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு உணவகம் நடத்தி வரும் தினேஷ் அரோரா மிகவும் நெருக்கமானவர் எனவும், இடைத்தரகர் தினேஷ் அரோரா, தனது உணவகமான அன்ப்ளக்ட் கோர்ட்யார்டில் நடந்த பார்ட்டியின் போது சஞ்சய் சிங்கை சந்தித்ததாகக் கூறியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி!

சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியையும், தொழிலதிபர் அதானியையும் கேள்விக்கு உள்ளாக்கியதன் விளைவாக இந்த சோதனை நடக்கிறது என  ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “இது அவர்களின் (பாஜக) அவநம்பிக்கையான முயற்சி. அவரது (சஞ்சய் சிங்) வீட்டில் எதுவும் கிடைக்காது. 2024 தேர்தல் வரப்போகிறது. அதில் தோற்போம் என்பது அவர்களுக்குத் தெரியும். தேர்தல் நெருங்கி வருவதால் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களும் செயல்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

click me!