ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆம் ஆத்மியின் மாநிலங்களவைத் தலைவர் சஞ்சய் சிங்கை மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிடியு மார்க்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பல தொண்டர்கள் கூடி, மத்திய அரசுக்கு எதிராகவும், சஞ்சய் சிங்கை விடுவிக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி அவர்கள் பேரணியாக செல்லவுள்ளனர். நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் தொடர்பான பிரச்சனைகளை எழுப்பியதால், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
undefined
“அதிகாரத்தின் அடிப்படையில், சர்வாதிகாரத்தை திணித்து, மத்திய அமைப்புகளை 'பயன்படுத்தி' தேர்தலில் வெற்றி பெறலாம் என பாரதிய ஜனதா கட்சி நினைத்தால், அதற்கு பொதுமக்கள் பதிலடி கொடுத்த வரலாறுதான் நிறைய உள்ளது.” என டெல்லி அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
முக்கியப்புள்ளி வெளியே இருக்கிறார்: கெஜ்ரிவாலை மறைமுகமாக சாடிய அனுராக் தாக்கூர்!
இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேர விசாரணைக்கு பின்னர், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மனிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், சஞ்சய் சிங்கின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. சஞ்சய் சிங், மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு உணவகம் நடத்தி வரும் தினேஷ் அரோரா மிகவும் நெருக்கமானவர் எனவும், இடைத்தரகர் தினேஷ் அரோரா, தனது உணவகமான அன்ப்ளக்ட் கோர்ட்யார்டில் நடந்த பார்ட்டியின் போது சஞ்சய் சிங்கை சந்தித்ததாகக் கூறியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சஞ்சய் சிங் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.