
நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், பேமெண்ட் அடையாள எண்ணாக ஆதார் எண்ணை மாற்ற மத்தியஅரசுதிட்டமிட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் ‘பீம்’(bhim) செயலியில் 12 இலக்க ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, பணம் அனுப்பும், பெறும் முறையை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால், ‘பிம்’ செயலியில், விரல் ரேகையை பதிவு செய்துதான் பணம் அனுப்பும், பெறும் முறை என்பது தேவையில்லை. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்தே பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.
நாட்டில் வங்கிக்கணக்கு உள்ளவர்களில் மூன்றில் ஒருபகுதியினர் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்துள்ளதால், இதை எளிதாக நடைமுறைக்கு கொண்டு வர முடியும் என்று அரசு கருதுகிறது.
இதற்காக ஆதார் எண் வழங்கும் அமைப்பான ‘உதய்’(யுஐடிஏஐ) தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இது குறித்து ஆதார் எண் வழங்கும் உதய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜெய் பூஷான் பாண்டே கூறுகையில், “ நாட்டில் உள்ள மக்களில் 38 கோடிபேர் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்துள்ளனர். இவர்களால் யு.பி.ஐ. செயலி மூலம், ஆதார் எண் உதவியால் நேரடியாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.
அதேபோல, அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த பீம் செயலியிலும் பணத்தை பெறவும், அனுப்பவும் முடியும். ஆனால், அதற்கு தனியாக யு.பி.ஐ. பின் எண்ணை உருவாக்கி அதன் மூலம் அனுப்ப வேண்டும். ஆனால், ஆதார் எண்ணை ‘பிம்’ செயலியுடன் இணைக்கும்போது, தனியாக பின் எண் தேவையில்லை. வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தியே பணத்தை அனுப்பலாம், பெறலாம்.
இப்போது மாதம் ஒன்றுக்கு 2 கோடி பேர் ஆதார் எண்ணை, தங்களின் வங்கிக் கணக்கில் பதிவு செய்து வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இருப்பவர்கள் வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து இருப்பார்கள். அப்போது ஆதார் எண்ணை பயன்படுத்தி பயணத்தை அனுப்பும் முறை எளிதாகும்.
வர்த்தகர்களுக்கான பிம் செயலியில், வாடிக்கையாளர்கள் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து பணத்தை பெறும் முறையும் சோதனையில் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆந்திரபிரதேசத்தின் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் பயனாளிகள் இந்த ஆதார் விரல்ரேகை பதிவு செய்து, அதன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.