
நாட்டில் பணமில்லா பரிமாற்றத்தை கொண்டு வரும் முயற்சியாக, ஆதார் எண் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் ஆன்ட்ராய்ட் அடிப்படையிலான “ஆப்ஸை”(செயலி) விரைவில் மத்தியஅரசு வெளியிட உள்ளது. ஆதார் வழங்கும் அமைப்பான யு.ஐ.டி.ஏ.ஐ. இதற்கான இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தை புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனமான டி.சி.எஸ். உடன் சேர்ந்து அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கான செயலியையும் இந்த நிறுவனமே தயார் செய்து கொடுத்துள்ளது.
இ்ந்த செயலியை வர்த்தகர்கள் வங்கிகளில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த செயலியை பயன்படுத்த கண்டிப்பாக வர்த்தகர்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் விரல்ரேகை ஸ்கேனிங் கருவி கட்டாயம்.
இந்த கருவிகள் இருந்தால், வாடிக்கையாளர் பொருட்கள் ஏதும் வாங்கினால், அவர்களின் ஏ.டி.எம். பின் நம்பர் இல்லாமல், ஆதார் எண் மூலமே பணப்பரிமாற்றம் செய்து கொள்ள வர்த்தகர்களால் முடியும்.
நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் ஊக்கப்படுத்த அமைக்கப்பட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான 6 முதல்வர்கள் குழுவில் இ்ந்த திட்டத்துக்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க, மிக எளிதான வாடிக்கையாளர் படிவத்தை நிரப்பி இந்த பரிமாற்றத்தை வர்த்கர்கள் மேற்கொள்ள முடியும்.
அப்போது வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் பாதுகாப்பாக கண் கருவிழி ஸ்கேனர், ஒரு முறைபயன்படுத்தும் பாஸ்வேர்ட் ஆகியவையும் அளிக்கப்படும். இந்த திட்டம் மிகவிரைவாக நடைமுறைக்கு வர இருக்கிறது என நிதிஅமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.