பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
ஆதார் அட்டை இல்லாத எந்த குழந்தைக்கும் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான முந்தைய அறிவிப்புகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் வரம்பிற்கு உட்பட்டவை. 05.09.2018 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட, ஆதார் இல்லையென்றால் குழந்தைகளுக்கு உரிய பலன்கள் அல்லது உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. ஆதார் இல்லாததால் எந்த குழந்தைக்கும் அனுமதி மற்றும் பிற வசதிகள் மறுக்கப்படக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.
ஆதார் அடையாள அட்டை இல்லையென்றால் தகுதியான எந்தக் குழந்தைக்கும், மத்திய அரசு வழங்கும் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்கள் மறுக்கப்படக் கூடாது; மற்ற சான்றிதழ்களை வைத்து அதற்கான பலன்களை பெறலாம் என பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, 29.11.2021 தேதியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பதிவு செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் முகவரிச் சான்றுகள் தேவை, அவை சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்த பல குழந்தைகளிடம் இல்லை. ஆனாலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால், குழந்தைகள், குறிப்பாக விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கல்விக்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆதார் எண் இல்லை என்பதற்காக எந்தவொரு குழந்தைக்கும் எந்தத் திட்டத்தின் பலன்களையும் மறுக்க முடியாது என்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் கூறியது. “CBSE, NEET, UGC ஆகியவை ஆதாரை கட்டாயமாக்க முடியாது. பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை.” எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Gas Price : அதிரடியாக குறைந்த எல்பிஜி சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ !!
கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆதார் கட்டாயம் என்ற விதிமுறைகள் அதனை மறுப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறுவதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கப்போவதாக 2022 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின. அம்மாநிலத்தில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் மாணவர்களுக்கு ஆதார் அட்டை இல்லை; 5.9 மில்லியன் குழந்தைகள் தங்கள் ஆதார் அட்டைகளில் பள்ளிப் பதிவேடுகளுடன் பொருந்தாத விவரங்கள் போன்ற சிக்கல்களை எதிர்கொள்வதாக தரவுகள் கூறுகின்றன.
பள்ளிகளில் வேலை நாட்களில் இலவச மதிய உணவு வழங்குவது குழந்தைகளின் சேர்க்கைக்கு ஒரு முக்கிய காரணியாகும், குறிப்பாக தொலைதூர, பழங்குடியின சமூக குழந்தைகளுக்கு இந்த திட்டம் மிகவும் பலனுள்ளதாக இருக்கும். ஆனால், கிராமப்புறங்களில் ஆதார் பதிவு செய்வதில் பல தடைகள் இருப்பதாகவும், ஆதார் அடிப்படையிலான செயல்முறைகளைப் பற்றி தொழில்நுட்ப ரீதியில் பல இடங்களில் மக்கள் இன்னும் முன்னேறவில்லை எனவும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நவம்பர் 2022 நிலவரப்படி சுமார் 135.2 கோடி ஆதார் எண்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 71.1 கோடி ஆதார் எண்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 2022-23 பொருளாதார ஆய்வு கூறுகிறது. அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் அல்லது அதன் பதிவுச் சீட்டு கட்டாயம் என ஆகஸ்ட் 11, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.