ஆதாரால் மாட்டிக்கொண்ட 80 ஆயிரம் பேராசிரியர்கள்... ஒருவர் எத்தனை கல்லூரிகளில் முழுநேர வேலை பார்த்து சம்பளம் வாங்குறாரு...?!

First Published Jan 6, 2018, 7:32 PM IST
Highlights
Aadhaar helped identify 80000 ghost teachers in higher education institutions


பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதால், இப்போது பல முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. அவற்றில், கல்வி கற்றுக்  கொடுக்கும் படித்தவர்கள் பலரே முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது. 

ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளதால், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரமாக பணியாற்றி வந்த சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நேற்று 2016-2017க்கான ஆல் இண்டியா சர்வே ஆன் ஹையர் எஜுகேஷன் அறிக்கையை தாக்கல் செய்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி கல்லூரி, பல்கலைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்திருந்தனர். இவர்களில் சுமார் 85% பேர் இதுவரை தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து விட்டதாகவும் அனைவரும் ஆதார் எண்ணை பதிவு செய்தால், இந்த எண்ணிக்கை உயரும் என்று மனித வளத்துறை நம்புகிறது. 

இந்த அறிக்கை குறித்து பிரகாஷ் ஜாவ்டேகர் குறிப்பிட்டபோது, ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டதை அடுத்து, ஒருவர் பல கல்லூரிகளில் முறைகேடாக முழு நேர பேராசிரியராகப் பணியாற்றியுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. ஆதார் தகவல் மூலம் இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முழுநேரமாகப் பணியாற்றி பலன்களை அனுபவித்து வரும் சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் விவரம் தெரியவந்துள்ளது என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

இருப்பினும், இவ்வாறு இனம் காணப் பட்டவர்களில் எவரும் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் இல்லை. மாநில பல்கலைக்கழகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருபவர்களே இவ்வாறு முறைகேடாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

ஆதார் எண்ணை பதிவு செய்வது என்பது, செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் பரிமாறிக்கொள்வது போன்றதுதான். செல்போன் எண்ணை பரிமாறிக் கொள்வதால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடிவிட முடியாது. அதுபோலதான் ஆதாரும்! அது பாதுகாப்பானது என்று கூறினார் ஜாவ்டேகர்.

இந்த அறிக்கையில் மேலும் பல சுவாரஸ்யங்கள் தெரியவந்துள்ளன. 18-23 வயது அளவில் உயர் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 35 லட்சம் அதிகரித்துள்ளது. 

10 மாநிலங்களில் மகளிருக்காகவே 9.3 % கல்லூரிகள் 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 

click me!