
உத்தரப்பிரதேச அரசுப் பள்ளிகளில் ஆதார் அட்டை இல்லாவிட்டால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவு
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டுமானால் ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்ற உத்தரவை 3 மாதங்களுக்கு முன்பாக பிறப்பித்திருந்தது. அதனை தற்போது உத்தரப் பிரதேச மாநில அரசு அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. ஆதார் அட்டை இல்லாவிட்டால் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள்
ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் அட்டை பெறும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களை முடுக்கி விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளும் அரசு உத்தரவை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் சர்வேந்திர விக்ரம் பகதூர் சிங் எழுதியுள்ள கடிதத்தில், அரசின் மதிய உணவு திட்டத்தில் பலன்பெற அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதுமட்டுமல்லாது ஆதார் இல்லாமல் அரசின் பிற சலுகைகளையும் மாணவர்கள் பெற முடியாது. எனவே அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றிருக்கிறார்களா என்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடைமுறைக்கு சாத்தியமா?
தற்போதைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் ஆதார் அட்டை வைத்திருக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. மீரட் நகரில் உள்ள 1561 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 73,000 மாணவர்களில் 29,000 மாணவர்களிடம் மட்டுமே ஆதார் அட்டை உள்ளது. இது 17 சதவீதத்துக்கும் குறைவானது. உ.பி.யில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூலை 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் அரசு இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் பள்ளி நிர்வாகிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.