ஆதார்-பான்கார்டு இணைப்பு 3-வது முறையாக காலக்கெடு நீட்டிப்பு தெரிஞ்சுக்குங்க….செல்போன், வங்கிக் கணக்குடன் இணைப்பதில் மாற்றமில்லை

First Published Dec 8, 2017, 11:18 PM IST
Highlights
aadar pan card due date extended


பான் கார்டுடன் , 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்க  அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன் மூலம் பான்-கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு 3-வது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசின் சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை ஒன்றாக இணைத்து நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று முன் தினம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், டி.ரி. சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேனுகோபால் கூறுகையில், “ பான்கார்டுடன், ஆதார் எண்ணை இன்னும் பலர் இணைக்காமல் இருப்பதால், அதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை நீட்டிக்க அரசு தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிக்கையை நாளை வெளியிடும். அதே சமயம், வங்கிக்கணக்குடன் இணைக்கும் காலக்கெடுவான இம்மாதம் 31ந் தேதி, செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ந் தேதியை மாற்ற முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது-

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க இம்மாதம் 31-ந் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்னும் பலர் இணைக்காமல் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 33 கோடி பேர் பான்-கார்டு வைத்திருக்கும் நிலையில் அதில் 13.06 கோடி  பேர் மட்டுமே இணைத்துள்ளனர். ஆதலால், பான் எண்ணை, 12 இலக்க ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் கொண்டு வரப்பட்ட வருமானவரிச் சட்டம் 1961ன்படி, வருமான வரி செலுத்துபவர்கள், தங்களின் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். முதலில் ஆகஸ்ட் 31-ந் தேதிவரை காலக்கெடு கொடுக்கப்பட்டு,  பின் டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, இப்போது 2018ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

click me!