
கடையில் புகுந்து சிறிது வேர்கடலையை தின்றதுக்காக ஒரு எலியை 2 நாளாக கட்டி வைத்து ஒரு கடைக்காரர் அடித்து கொடுமை செய்துள்ளார்.அதைவீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்.
மளிகைக் கடைகளில் எலிகள் இருப்பது வழக்கமான ஒரு விஷயம்தான். இதை சமாளிக்க சில நேரங்களில் கடைக்காரர்கள் மருந்துகளை வைப்பார்கள், அல்லது எலிப்பொறியை வைத்து பிடிப்பார்கள். இன்னும் சிலர் பூனையை வளர்த்து எலியை விரட்டி அடிப்பார்கள். இதைத்தான் வழக்கமாக செய்கிறார்கள்.
ஆனால், மைசூரைச் சேர்ந்த மெலஹாலி ராமண்ணா என்பவர் நடத்தும் மளிகை கடையில் ஒரு எலி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளது. உணவுப்பொருட்களை திண்று சேதப்படுத்தி வந்துள்ளது. இந்த எலியைப்பிடிக்க கடைக்காரர் ராமண்ணா பல பகீரத முயற்சிகள் செய்தும் அவருக்கு ‘தண்ணி’ காட்டி எலி தப்பித்து சென்றது.
இந்நிலையில், ஒருநாள் ராமண்மா வைத்த பொறியில் அந்த எலி சிக்கிக்கொண்டது. அவ்வளவுதான், எலிமேல் இருந்த அத்தனை கோபத்தையும் ராமண்ணா,கொட்டித் தீர்த்துவிட்டார். தன்னிடம் சிக்கிய எலியை 2 நாட்களாக கட்டி வைத்து ரண களப் படுத்தியுள்ளார்.
தன்னிடம் சிக்கிய எலியின் கால்களைக் கட்டி, கைகளையும் ரப்பர் பேண்டால் கட்டி ஒரு சிறிய கட்டையில் கட்டி நிற்கவைத்து விட்டார். எலி தப்பிச் செல்லாமல் இருக்க அதை ஒரு கண்ணாடி ஜாருக்குள் வைத்து விட்டார்.
ராமண்ணா தனக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் எலியை தூக்கி வெளியே வைத்துக்கொள்வார். என் கடையில் வேர்கடலையை தின்பியா?, பருப்பை தின்பியா? , சீனியைத் தின்பியா எனக் கேட்டுக்கொண்டே குச்சியால் அடித்துள்ளார்.
எலி வலியால் அலறி கீச்சிடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனது நண்பர்களுக்கும் இதை காட்டியுள்ளார். 2 நாட்கள் இதேபோல் எலியை கட்டிவைத்து, பட்டிணி போட்டு அடித்துள்ளார்.
ராமண்ணா அடிக்கும் காட்சியையும், எலியை கட்டிப்போட்டு இருக்கும் காட்சியையும் அவரின் நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இப்போது இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அந்த ஜாடி திடீரென கீழே விழுந்தவுடன் அதில் இருந்த எலி கடைக்காரர் ராமண்ணாவிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டது.
இப்போது இந்த வீடியோ பார்க்கும்போது, ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தபோதிலும், வாயில்லா சிறுபிராணிகளை இப்படி ‘டிசைன் டிசைனாக’ கொடுமைப்படுத்துவது மனிதநேயமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
எலிக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூகவலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.