உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா திருவிழா களைகட்டியுள்ளது. அங்கு நடந்த சிறப்பு கண்காட்சியில் பெடல் அரவை இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ரஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பமேளா' திருவிழா இப்போது நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான இதில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திரிவேணி சன்பமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதனால் 'மகா கும்பமேளா' உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
'மகா கும்பமேளா' திருவிழாவையொட்டி பிரயாக்ஜில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதாவது உள்ளூர் மக்களின் பாரம்பரிய உணவு பொருட்கள், அவர்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் 2025 மகா கும்பமேளாவையொட்டி நடந்த மாவட்ட தயாரிப்பு கண்காட்சியில் கால்களால் இயக்கப்படும் பெடல் தானிய அரவை இயந்திரம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஆலையை காஜியாபாத் பொறியியல் நிறுவனம் உருவாக்கியது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், மக்கள் உடற்பயிற்சி செய்து கொண்டே தானியங்களை அரைக்கலாம். இந்த கண்காட்சியில் பலர் இந்த இயந்திரத்தை சோதித்து பார்த்தனர். இந்த பெடல் அரவை எந்திரம் மூலம் ஒரு கிலோ தானியத்தை 20 நிமிடங்களில் பொடியாக அரைக்க முடியும்.
ஜிம் மற்றும் யோகா செய்ய நேரமில்லாதவர்களுக்காக இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் இதை வீட்டில் எளிதாகப் பயன்படுத்தலாம் என்று காஜியாபாத் பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மிதிவண்டியைப் போலவே, காலால் இயக்கப்படும் இயந்திரம் மின்சார மாவு ஆலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாகும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த இயந்திரம் தான் இப்போது மகா கும்பமேளா நகரின் பேச்சாக அமைந்துள்ளது. இந்த இயந்திரத்தை அரசு பங்களிப்புடன் அனைத்து வீடுகளிலும் நிறுவ காஜியாபாத் பொறியியல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.