
வீடு, நிலம் வாடகைக்கு, லீசுக்கு விட்டு இருப்பவர்கள், “ஷாப்பிங் மால்”, கட்டிடங்களை லீசுக்கு விட்டு இருப்பவர்கள், இ.எம்.ஐ. செலுத்தி புது வீடு வாங்க இருப்பவர்கள் அனைவரும் ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.
இந்த பிரிவினர் ஜி.எஸ்.டி வரியை மாதந்தோறும் செலுத்தியாக வேண்டும். இவர் செலுத்தும் வரி, வாடகை வீட்டில் குடியிருக்கும் சமானியர் தலையில்தான் இனி விழப்போகிறது.
ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவைவரியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மத்திய கலால்வரி, சேவைவரி, மாநிலஅரசுகளால் வசூலிக்கப்படும் வாட் வரி உள்ளிட்ட அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி வரி மட்டும் வசூலிக்கப்படும்.
மக்களவையில் ஜி.எஸ்.டி துணை மசோதாக்களை திங்கள்கிழமை நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில் “ நிலம் விற்பனை செய்வது, கட்டிடங்கள், வீடுகளை விற்பனை செய்வது என்பது ஜி.எஸ்.டி. வரியின் கண்காணிப்பில்தான் இருக்கும்.
புதியவீடுகள், நிலம் விற்பனை போன்றவற்றுக்கு நடக்கும் ரொக்கப் பரிமாற்றங்களுக்கு, முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அது ஜி.எஸ்.டி. வரம்பில்தான் வருகிறது. ஆனால், மின்கட்டணம் என்பது ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வரப்படாது” என்றார்.
மத்திய ஜி.எஸ்.டி பிரிவின் கீழ் வீடு விற்பனை செய்தல், நிலம் விற்பனை செய்தல், இடத்தை லீசுக்கு விடுதல், வீடு வாடகைக்கு விடுதல், லீசுக்கு விடுதல், புதிதாக கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டை இ.எம்.ஐ. செலுத்தி வாங்குதல் என அனைத்தும் வருகிறது.
ஒரு இடம், கட்டிடத்தை முழுமையாக வணிக நோக்கத்துக்காக வாடகைக்கு விடுதல், லீசுக்கு விடுதல், அல்லது பகுதியாக விடுதலும் சேவைவரியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
நிலத்தை விற்பனை செய்தல், கட்டிடத்தை விற்பனை செய்தல், புதிதாக கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டை விற்பனை செய்தல் ஆகியவை பொருட்களுக்கான வரிவிதிப்பின்கீழ் வரும், சேவை வரி விதிப்பின் கீழ் வராது.
தற்போது சேவை வரி என்பது, வர்த்தக ரீதியான கட்டிடங்கள், தொழிள்சாலைகள் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.ஆனால், வீடு வாடகைக்கு விடுதல், லீசுக்கு விடுதல் போன்றவற்றுக்கு விதிக்கப்படவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இவை அனைத்தும் சரக்குகள் மற்றும் சேவை பிரிவின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
இப்போது சேவை வரி என்பது 18 சதவீதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி வரியில் எத்தனை சதவீதம் வரிவிதிக்கப்பட உள்ளது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
வரும் 31-ந்தேதி மீண்டும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடுகிறது. அப்போது இது தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.