
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை போல், எதிர்வரும் 5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறுமா என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்தாலும், அவர் மீண்டும் அக்கட்சியின் தேசியத் தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தல் அமித்ஷா தலைமையில் எதிர் கொள்ள இருக்கிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்படுகின்றன. அதேவேளையில் திரும்ப பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு நிகரான பணம் மீண்டும் புழக்கத்துக்கு விடப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே, ரூபாய் நோட்டுகள் தட்டுப்பட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இதன் பாதிப்புகள் எதிரொலிக்கும் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் மகாராஷ்டிரா, சண்டீகர் ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனாலும், அந்த மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய பலம் வாய்ந்த கட்சி இல்லை என்றாலும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவுடன் அக்கட்சி நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது.
அடுத்த ஆண்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரில் பாஜக இதுவரை ஒருமுறை கூட ஆட்சியைப் பிடித்தது இல்லை. அந்த மாநிலம் காங்கிரசின் கோட்டையாக உள்ளது. பஞ்சாபில் அகாலி தளம்-பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட மாநிலங்களில் தனது அரசை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு யூகங்களை பாஜக வகுத்து வருகிறது.
நாட்டிலேயே அதிக சட்டப் பேரவைத் தொகுதிகளையும், அதிக மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்த மாநிலத்தில் வெற்றியைத் தக்க வைக்கும் கட்சிதான் மத்தியில் பலம் வாய்ந்ததாக இருக்கும்.
அதற்கேற்ற வகையில், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது.
எனவே, இந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பாஜக காத்துக் கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரேதசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சியில் அண்மையில் அதன் தலைவர் முலாயம் சிங்கின் குடும்பப் பிரச்சனை வெடித்தது. இந்தச் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கில் சமாஜவாதியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி "நாங்கள் துவண்டிருக்கும் நேரங்களில் எல்லாம் காங்கிரஸ் எங்களுக்கு கைகொடுக்கும். அரசியலில் எதுவும் நடக்கலாம்' என்று அந்த மாநில முதல்வரும் சமாஜவாதி தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டு விவகாரம் 5 மாநிலத் சட்டப் பேரவை தேர்தலில் எதிரொலிக்குமா? அல்லது அந்த நடவடிக்கையை மக்கள் ஆதரிப்பதாக தெரிவித்து வரும் பாஜகவின் கூற்று உண்மையாகுமா? இந்தக் கேள்விகளுக்கான விடை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேசத் தேர்தலில் கிடைத்து விடும்.