கர்நாடகாவின் ராய்ச்சூரில் அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 வயது குழந்தை பலி

By SG BalanFirst Published May 28, 2023, 9:41 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடித்ததால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. மேலும் 30 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் 3 வயது குழந்தை பலியாச சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சுமார் 30 பேரும் அசுத்தமான நீரைக் குடித்ததால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்ய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் கர்நாடக முதல்வர் சித்தராமையா சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.

Latest Videos

ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுக்காவில் உள்ள ரெகல்மார்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிக்குள்ளான சிலர் தேவதுர்காவில் உள்ள அரகேரா சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் ராய்ச்சூர் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (RIMS) மாற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் அசுத்தமான தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை உட்கொண்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவால், குடிநீரில் சாக்கடை நீர் கலந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், முதல்வர் சித்தராமையா தலைமை நிர்வாக அதிகாரியுடன் தொலைபேசியில் பேசி, அப்பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அசுத்தமான குடிநீரை குடித்து மக்கள் நோய்வாய்ப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டு விரிவான ஆய்வு நடத்தி, அசுத்தமான தண்ணீரின் மாதிரிகளை உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெற வேண்டும்; அறிக்கையின் அடிப்படையில், கிராம மக்களுக்கு முழுமையான சுகாதார பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

அசுத்தமான நீர் ஆதாரங்களை மூடி, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் சித்தராமையா அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.

click me!