
கொரோனா விதிமுறைகள் மீறியதாக இதுவரை350 கோடி ரூபாயும் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து மட்டும் 215 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பூசிகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தற்போது 4வது அலை வரை ஏற்பட்டுவிட்டது. கடந்த மார்ச் 20, 2020 இல் இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்தது.
பொது இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் வரக்கூடாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், கொரோனா பரிசோதனைக்கு கொடுத்திருந்தால் முடிவுகளை அறியும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு விதித்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் 67,476 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2020 ஜனவரியில் சீனாவில் மருத்துவம் பயின்றுவந்த மாணவர்கள் சிலர் தாயகம் திரும்பினர். இதில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 22 வயது மருத்துவ மாணவி ஒருவர் தனக்கு தொண்டையில் அரிப்பு இருப்பதாக கேரள சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அவரை ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் சென்றது. ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் திருச்சூர் பக்கம் திரும்பியது. திருச்சூர் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்த மாணவி தான் இந்தியாவின் முதல் கொரோனா தொற்றாளர். இதன்காரணமாக தொடங்கிய நாள் முதல் கேரளா கொரோனா விதிமுறை மீறல்களை தீவிரமாகக் கண்காணித்து வந்தது. மேலும் விதிமுறை மீறலில் ஈடுபடுவோர் மீது அபராதங்கள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவில் இதுவரை 350 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 215 கோடி ரூபாயும் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.