
ஆமதாபாத், அக். 22-
கடந்த 2002-ல் குஜராத் கோத்ரா கலவரத்துக்கு பின் நடந்த, சர்தார்புரா வன்முறையில் 33 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், 14 பேரை விடுவித்தும் மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2002-ல் நடந்த கோத்ரா வன்முறைக்குப் பின் நடந்த சர்தார்புரா பகுதியில் நடந்த வன்முறையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 33 பேரை ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் 76 பேரை கைது செய்தனர். இதில் விசாரணையின் போது 2 பேர் இறந்தனர், ஒருவர் அப்போது மைனராக இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் போலீாசர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எஸ்.சி. ஸ்ரீவஸ்தவா, கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்தும் மற்றவர்களை விடுவித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் ஹர்ஷா தேவானி, பிரேன் வைஷ்னவ் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதில் வழக்கில் குற்றவாளிகள் என விசாரணை நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட 31 பேரில் 17 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தார், மீதமுள்ள 14 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மேல்முறையீட்டின் போது, அவர்களுக்கு எதிராக 2 சாட்சியங்களை அரசு தரப்பு அளிக்க வேண்டும். அதன்படி, இதில் 14 பேருக்கு எதிராக போதுமான சாட்சியங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை. ஆதலால், அரசு தரப்பில் போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யாதது, சாட்சியங்களின் முரண்பாடான வாக்குமூலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 14 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேசமயம், விசாரணை நீதிமன்றம் விடுவித்த 31 பேருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு, குஜராத் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.