
ஆந்திரப்பிரதேச மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருந்து விஷவாயு கசிந்துள்ளது. இதை சுவாசித்த 178 பெண் ஊழியர்களுக்கு திடீர் மயக்கம், வாந்தி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பு பொருளாதார மண்டலம்
அனகாபள்ளி மாவட்டம், அட்சுபுரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது.இங்கு பிராண்டிக்ஸ் இந்தியா ஆடை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயத்த ஆடை தயாரிப்பு நிருவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இந்த ஆடை நிறுவனத்துக்கு அருகே செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென வாயு கசிந்துள்ளது. இந்த வாயுவை ஆடைநிறுவனத்தில் இருந்த பெண் ஊழியர்கள் சுவாசித்தநிலையில் சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தியும், மயக்கமும், மூச்சில் எரிச்சல், வயிற்றுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக 178 பெண் ஊழியர்கள் அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் பெண் ஊழியர்கள் இயல்புக்கு வந்தனர்
ஆய்வு
இ்த சம்பவம் குறித்து அனகாபள்ளி மாவட்ட நிர்வாகம், போலீஸார்,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் எந்தவிதமான வாயு கசிந்துள்ளது என்பது குறித்த ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், போலீஸார் நடத்திய விசாரணையில் அமோனியா வாயு கசிந்துள்ளது என்று தெரிந்துள்ளது. ஆனால், ரசாயன ஆலையிலிருந்து விஷவாயு கசிந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ ரசாயன ஆலையைஆய்வு செய்தோம். அங்கு எந்தவிதமான வாயு கசிந்ததற்கும் அடையாளம் இல்லை. எங்களைப் பொருத்தவரை ரசாயன ஆலையிலிருந்து எந்த வாயும் கசியவில்லை, அங்கு வேலை செய்பவர்களும் இயல்பாகவே இருக்கிறார்கள்.
ரசாயன ஆலையில் வாயு ஏதேனும் கசிந்திருந்தால், அங்கு பணியாற்றுபவர்கள்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள், சுற்றுப்புறங்களில் இருப்போரும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அவ்வாறு ஏதும் இல்லை. இயல்பாக இருக்கிறது. எந்தவிதமான வாயு கசிந்தது என்பது மர்மாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்
மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில் “ ஆடை நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள குளிர்சாதன வசதி பெட்டியிலிருந்து வாயு கசிந்ததா, அல்லது ஊழியர்கள் சாப்பிட்ட உணவதரமற்றதா எனவும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் பி ரவி சுபாஷ் கூறுகையில் “ ரசாயனஆலைக்கு சென்று பார்வையி்ட்டேன். வாயுகசிவு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும்”எனத் தெரிவித்தார். பிரான்டிக்ஸ் இந்தியா அப்பேரல் நிர்வாகம் தரப்பில் கூறுகையில் “ 2 பெண்களைத் தவிர அனைத்துப் பெண்களும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினர்”எனத் தெரிவித்தனர்.