சபரிமலையில் 144 தடை உத்தரவு...

By manimegalai aFirst Published Oct 17, 2018, 6:17 PM IST
Highlights

ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் நிலக்கல், இளவந்தல், பம்பை, சன்னிதானத்தைச் சுற்றி 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். 

சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் நிலக்கல், இளவந்தல், பம்பை, சன்னிதானத்தைச் சுற்றி 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை, இந்து அமைப்புகள் மற்றும் பெண்கள் என பலர் தடுத்து வந்தனர். மேலும், பெண் செய்தியாளர் வந்த வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனால் நிலக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறி இலேசாக தடியடி நடத்தினர். இதையடுத்து, இந்து அமைப்புகள் போலீசார் மீது கற்களைக் கொண்டு வீசினர்.

ஐயப்பன் கோஷம் சத்தமே கேட்டு வந்த அப்பகுதியில் போலீஸ் தடியடி... ஆட்கள் சிதறி ஓடுதல்... என ஏகப்பட்ட களேபரங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில், சபரிமலை சன்னிதான சுற்றுவட்டார பகுதிகிளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், இளவந்தல், பம்பை மற்றும் சன்னிதானத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் 144 உத்தரவை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு பிறப்பித்தார். 144 தடை உத்தரவு நாளை காலை முதல் 22 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களையும் பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்று ஆட்சியர் கூறினார்.

இதனிடையே ஐயப்பன் கோயில் சந்நிதானம் மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டவுடன் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை அடுத்து, பக்தர்கள் ஐயப்பனை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்ற வகையில், கோயிலுக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள், ஐயப்பனை தரிசனம் செய்யும் வகையில் தனியாக பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. ஐயப்பன் கோயிலுக்கு நாளை முதல் பெண்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!