1,288 ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு ஒரே நேரத்தில் பதில் - வியப்பில் ஆழ்த்திய மத்திய தகவல் தொடர்புத் துறை ஆணைய அதிகாரி

First Published Apr 23, 2017, 9:10 PM IST
Highlights
Sanjeev Sharma approached the Central Information Commission


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ், ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி ஒருவர் கேட்டிருந்த ஆயிரத்து 288 கேள்விகளுக்கு ஒரே நேரத்தில் பதில் அளித்து மத்திய தகவல் தொடர்புத் துறை ஆணைய அதிகாரி திவ்யா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை விங் கமாண்டர் சஞ்சீவ் சர்மா, இந்திய விமானப் படை நிர்வாகத்திற்கு 6 ஆயிரத்து 443 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்டிருந்தார். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தனது கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு அவர் அந்த மனுக்களில் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அந்த கேள்விகளுக்கு உரிய பதில் விமானப்படை நிர்வாகத்தில் இருந்து கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அந்த அதிகாரி சஞ்சீவ் சர்மா, மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். அவரது கோரிக்கை மனுக்களை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் திவ்யா பிரகாஷ் சின்ஹா உடனடியாக , அந்த அதிகாரி கேட்டிருந்த ஆயிரத்து 288 கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் பதில் அனுப்பி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மேலும் சஞ்சீவ் சர்மாவின் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்காமல் கிடப்பில் போட்டதற்கு இந்திய விமானப் படை நிர்வாகத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தும் போது வழங்கப்பட்ட பரிசுகளின் விவரங்கள், விமானப்படையால் இதுவரை வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை , விமானப்படையின் அவசர நிதிகள் எவ்வாறு செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இந்திய விமானப் படையில் கறுப்புப்பண புழக்கம் உள்ளதா, ஊழல் நடைபெறுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்டதாக விசாரணையின் போது அவர் தெரிவித்தார்.

விமானப் படையில் ஊழல் நடைபெறுகிறதா என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தகவல்களைக் கேட்டிருந்த சஞ்சீவ் சர்மாவை தகவல் துறை ஆணையர் திவ்யா பிரகாஷ் சின்ஹா பாராட்டினார்.

click me!