
வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்தி சர்வீஸ் சார்ஜ் வசூலித்தால், ஓட்டல், ரெஸ்டாரண்ட் நிர்வாகிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். கடுமையான அபராதமும், நடவடிக்கையும் பாயும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
கட்டாயமில்லை
ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடும் வாடிக்ைகயாளர்கள் ‘சர்வீஸ் சார்ஜ்’ என்பது விருப்பத்தின் அடிப்படையில் செலுத்தலாம், கண்டிப்பாக செலுத்த வேண்டியது இல்லை என மத்திய அரசு கடந்த வாரம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
போய் சேர்ந்ததா?
அது குறித்து டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ வாடிக்கையாளர்களிடம் இருந்து 30 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் வசூலித்து எங்கள் பணியாளர்களுக்கு கொடுக்கிறோம் என சில ஓட்டல்கள் கூறுகின்றன. ஆனால், உண்மையில் அந்த பணியாளர்ளை சர்வீஸ் சார்ஜ் போய் சேர்ந்ததா?.
இப்போது வரை அது தெரியாது?. எவ்வளவு தொகை பணியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது? முழுமையாகவா, அல்லது பகுதி தொகை கொடுக்கப்படுகிறதா என்பதும் தெரியாது?.
வௌிப்படையாக
ஆதலால், சர்வீஸ் சார்ஜை வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு கொடுத்தால், அந்த கணக்கை ஓட்டல், ரெஸ்டாரண்ட்கள் நிர்வாகிகள் பராமரித்து, வெளிப்படையாக மக்களுக்கு எவ்வளவு சர்வீஸ் சார்ஜ் தொகையை ஊழியர்களுக்கு தந்து இருக்கிறோம் என்பதை கூற வேண்டும்.
குழப்பம்?
சேவை வரி, சர்வீஸ் சார்ஜ்க்கும் இடையே குழப்பம் இருக்கிறது. சர்வீஸ் டாக்ஸ்(சேவை வரி) என்பது கண்டிப்பாகச் செலுத்த வேண்டியது, சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளர்கள் விரும்பினால், செலுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் விருப்பம்
புதிய விதிமுறையின்படி, சர்வீஸ் சார்ஜ், ஓட்டல், ரெஸ்டாரண்ட் பில் கட்டணத்துடன் சேர்க்கப்படாது. ஓட்டல் பில்களில் சர்வீஸ் சார்ஜ் இடத்தில் ஏதும் நிரப்பக்கூடாது. அதை வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நிரப்பிக்கொள்ளலாம்.
வாடிக்ைகயாளர்களிடம் இருந்து சர்வீஸ் சார்ஜ் எவ்வளவு வசூலிக்கலாம் என்று ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் முடிவு செய்யக்கூடாது. அதை வாடிக்ைகயாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் விட்டுவிட வேண்டும். சர்வீஸ் சார்ஜ் செலுத்த கட்டாயப்படுத்தினால், வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அனுகலாம்’’ எனத் தெரிவித்தார்.
எச்சரிக்கை
அதேசமயம், சலூன் கடைகளில் வசூலிக்கப்படும் சர்வீஸ் சார்ஜ் குறித்தும் நுகர்வோர்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டியது அவசியம். இந்த விதிமுறைகளை மீறினால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், கடுமையான அபராதமும், நடவடிக்கையும் எடுக்கப்படும் என நுகர்வோர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.