
மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளிவரவுள்ளது என்றும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் நான்கு கேபினெட் அமைச்சர்கள் உள்பட 12 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படலாம் என்றும் அவர்களில் நான்கு பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்படும் சிலர் கர்நாடகாவில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் தன் பதவியை இழப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கட்சி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
தெலுங்கானாவில் இருந்து மூத்த பாஜக தலைவர் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறாராம். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு 156 தொகுதிகளை வென்றது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்த குஜராத் பாஜக தலைவர் சி. ஆர். பாட்டில், அமைச்சரவையில் இடம்பிடிக்கக்கூடும்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் அமைச்சரவை மாற்றத்தில் பிரதிபலிக்க வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த பாஜக தலைவர் பதவி யாருக்கு என்பது பற்றியும் பேசப்பட்டு வருகிறது. சி. ஆர். பாட்டில் மற்றும் தர்மேந்திரப் பிரதான் ஆகியோர் ஜே. பி. நட்டாவுக்குப் பின் பாஜக தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். ஆனால், நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
இதனியே அமைச்சர் பலர் அமைச்சரவை மாற்றத்தின்போது தங்கள் பதவி தப்புமா என்பதை அறிய ஜோசியர்களை நாடியிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கப்படலாம். அதனை முன்னிட்டு வரும் 16-17 தேதிகளில் நடைபெற்ற இருக்கும் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் பற்றிய விவரங்கள் தெரியவரலாம்.