ரோஹித் சர்மா அபார சதம்.. தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

By Selvanayagam PFirst Published Jun 5, 2019, 11:38 PM IST
Highlights

உலக கோப்பை கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்தியா உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 8-வது லீக் ஆட்டம் இங்கிலாந்தில் இன்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டான் டி காக் மற்றும் அம்லா களமிறங்கினர். இதில் அம்லா 6 ரன்னிலும், குயின்டான் டி காக் 10 ரன்னிலும், பும்ரா வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.

 பின்னர் களமிறங்கிய டு பிளிஸ்சிஸ் மற்றும் வான்டெர் துஸ்சென் சற்று நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் வான்டெர் துஸ்சென் 22 ரன்னிலும், டு பிளிஸ்சிஸ் 38 ரன்னிலும் அடுத்தடுத்து  சாஹல் சுழலில் ஓரே ஓவரில் போல்டாகி வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய டுமினி 3 ரன்னில் அவுட் ஆக, பின் ஜோடி சேர்ந்த பெலக்வாயோ மற்றும் டேவிட் மில்லர்  அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.  ஆனால் இந்த ஜோடியால் தொடர்ந்து சோபிக்க முடியவில்லை. 

இதில் டேவிட் மில்லர் 31 ரன்னிலும், பெலக்வாயோ 34 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். அடுத்து களமிறங்கிய ரபடா மற்றும் கிறிஸ் மோரிஸ் அணியின் ரன் ரேட்டை உயர்த்த தங்களது சீரான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 

இதில் கிறிஸ் மோரிஸ் 42 ரன்னில் கேட்ச் ஆனார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்களை எடுத்தது. கடைசியில் ரபடா  31 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான், ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 8(12) ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 18(34) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்ததாக ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா தனது அரைசதத்தை பதிவு செய்தார். 

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் 26(42) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், டோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 128 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். 

தொடர்ந்து அசத்திய இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டோனி 34(46) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். 

இறுதியில் ரோகித் சர்மா 122(144) ரன்களும், அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 15(7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 47.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபடா 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.

click me!