
மரவள்ளி கிழங்கில் மருத்துவக் குணங்கள் அதிகம்!
எப்போதும் உருளைக்கிழங்கே கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஒரு மாற்றாக மரவள்ளிக் கிழங்கில் விதம் விதமான உணவுகளை செய்து கொடுக்கலாம். உருளையில் செய்ய முடியாத பல உணவுகளை இதில் செய்ய முடியும் என்பதும், ஆரோக்கியமாக சமைக்கலாம் என்பதும் கூடுதல் தகவல்கள்.
பிரேசிலில் பிறந்த மரவள்ளிக்கிழங்கு மெதுவாக டிராபிகல் நாடுகளில் பரவி இதன் சுவை காரணமாக தென் அமெரிக்கா, தமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது.
ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு. உணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் – குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது. ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது. ஆசிய நாடுகளில் இதைப் பதப்படுத்தி வீட்டிலேயே கஞ்சி மாவு செய்து குழந்தைகளுக்கு ஊட்டுவார்கள். எளிதில் ஜீரணமாகும் இந்தக் கஞ்சி குழந்தையின் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது.
** ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது.
** ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
** கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
** ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது.
** ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
** உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
** 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும். முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
** அல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது.
** உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது.
** பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
** அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும்.
** நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.