“வொயிட் பாய்சன்” என்னும் வெள்ளைச் சர்க்கரை…

 
Published : Mar 02, 2017, 01:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
“வொயிட் பாய்சன்” என்னும் வெள்ளைச் சர்க்கரை…

சுருக்கம்

White Poison the white sugar

தொழில்நுட்பம் `வளர்ச்சி’ என்ற பெயரில் உருவாக்கியதுதான் வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம்.

எப்படி புகை, மதுவைத் தடை செய்யப்பட வேண்டிய பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அப்படி வைக்கவேண்டிய பொருள் சர்க்கரை.

ஆனால், இதுவோ உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துவிட்டது.

உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்துக்குத் தள்ளியதிலும், பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும் இந்த வகைச் சர்க்கரை அளித்த பங்கு அளவில்லாதது.

வெள்ளைச் சர்க்கரை

நியூட்டனின் புவியீர்ப்பு விசை சிந்தனையிலும், `கறந்த பால் மடி புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’ என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும், அறிவியலே அடித்தளம்.

நீயூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம் நீராவி இன்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரைக்குமான வளர்ச்சி. அந்த தொழில் வளர்ச்சிதான் இந்தச் சர்க்கரை உருவாக்கக் காரணமானது.

தயாரிப்பு முறை

இனிப்பையோ, இனிப்பு உணவுகளையோ நாம் சாப்பிடாதவர்கள் அல்ல. விதவிதமாகச் சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய `இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியல் அதற்குச் சிறந்த உதாரணம்.

கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப்பால்… என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ள குறிப்பு உள்ளது.

அவை அத்தனையும் அப்போது வெள்ளைச் சர்க்கரையில் அல்ல… வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன.

எந்த வகையிலும் இந்த இயற்கை இனிப்புக்கு மாற்றாக வருவதற்குத் தகுதியே இல்லாத இந்தச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாக நம் மீது திணிக்கப்பட்டுவிட்டது.

வெள்ளைச்சர்க்கரை ஆபத்து! இனி தேவையில்லை?

நம் உடல், தனக்குத் தேவைப்படும் சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ எடுத்துக்கொள்ளும். எனவே, தனியே வெள்ளைச் சர்க்கரை என்ற ஒன்று தேவையற்றது.

ஆனால் உண்மையில், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினமும் 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடுகிறோம்.

கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை ஆட்சி நடத்த தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது.

எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பையும், சாப்பிடுகிறவர்களின் உடலுக்கு நன்மையையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டுவிட்டது.

அதற்குக் காரணங்களாக, `வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீரை உள்வாங்கும். உற்பத்தி தரமாக இல்லை’ ஆகியவை சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம் இதன் பின்னணியில் இருக்கும் உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான்.

சர்க்கரை

இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்திக்கு மாற்றாக வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவு நிறைந்த கல் உப்பை விரட்டிவிட்டு, `அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனத்தை `சாப்பாட்டு உப்பு’ எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள்ளே நுழைந்திருக்கும் வணிகம்தானே தவிர, வேறு என்ன?

இங்கே `வளர்ச்சி’ பரிணாமமாக அல்லாமல், வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசி வரை காசாக்க, மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது.

எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை அடிமை முறையில் வடிவமைத்துவிட்டார்கள்.

அன்றைய கிழக்கு இந்திய கம்பெனியை வெள்ளந்தியாக வரவேற்றதுபோல, வெள்ளைச் சர்க்கரையையும் வரவேற்று வீட்டுக்குள் உட்காரவைத்துவிட்டோம்.

வெள்ளைக்கு அடிமையாகிவிட்டோம். அதன் மூலம், பல தொற்றா நோய்கள் நம்மைத் தாக்க வழிவிட்டுவிட்டோம்.

வெள்ளைச் சர்க்கரை என்பது விபரீதம். ஆகவே அதைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு அழகு.

 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க