அதிகம் பசிக்கிறதும்; பசியே எடுக்காமல் இருக்குறதும் ஆபத்தே…

First Published Mar 15, 2017, 2:17 PM IST
Highlights
Hungry not hungry both are dangerous


 

உண்ணுதல் கோளாறு என்பது தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பது அல்லது குறைவதேயாகும். பல்வேறு காரணிகளால் உண்ணுதல் கோளாறு உருவாக வாய்ப்பு உள்ளன.

காரணங்கள்:

ஒரு நபர் முதலில் குறைந்த அளவு அல்லது அதிக அளவு உணவை எடுத்துக்கொள்வதில் இருந்து படிப்படியாக உருவாகின்றது இந்த உண்ணுதல் கோளாறு. இக்கோளாறினால் துன்பமடையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு சில உளவியல் பிரச்சனைகளும் தென்படுகின்றன. அவை, மன உளச்சல், உடல் எடை குறித்த அச்சம், தாழ்வு மனப்பான்மை மற்றும் குடும்ப சூழல்கள் என்பவையாகும்.

அளவுக்கு அதிகமாக உண்ணும் கோளாறு என்பது பெரும்பசி நோயைப் போலவே இருக்கும், ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டபின், அதை வெளியேற்ற முயலமாட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர் பொதுவாக பருமனாகவே காணப்படுவார். இது பொதுவாக பெண்களைவிட, ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.

அறிகுறிகள்

உண்ணுதல் கோளாறு இருக்கும் நபர்கள், பெரும்பாலானோரை விடவும் அதிக உணவை வேகமாக சாப்பிடுவார்கள்.

மன உளைச்சலால் பாதிக்கப்படும்போது அதிகமாக சாப்பிடுவது அல்லது உணவை வெறுப்பது, அஜீரணக் கோளாறை உருவாக்கும் உணவு வகைகளை விரும்பி எடுத்துக்கொள்வது, வழக்கத்திற்கு மாறான நேரங்களில் சாப்பிடுவது போன்றவை.

அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளும் வேளையில், இயல்பை விட வேகமாக சாப்பிடுவது, பசி எடுக்காத போதும் அளவுக்கு அதிகமாக உண்பது, பிறர் காணாதவாறு தனியாக அதிகம் சாப்பிடுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது மிதமிஞ்சி நோய் எனப்படும்.

நோய் கண்டறிதல்

உண்ணுதல் கோளாறு என்பது மருத்துவத்தால் குணப்படுத்த கூடிய ஒரு வியாதியே. இந்த நோயானது பெரும்பாலும் மனச்சோர்வு, போதை மருந்து நாட்டம் உள்ளிட்ட பிற காரணிகளுடன் பிணைந்தே காணப்படும்.

சில அறிகுறிகளை உதாசீனம் செய்யும் நோயாளிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தலையும் இது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதில் பசியற்ற உளநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சம வயதுடையவர்களை விட 18 மடங்கு முன்னரே இறக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை

பசியற்ற உளநோய் (Anorexia Nervosa)

பசியற்ற நோய் பாதித்தவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது மிகவும் சிரம்மான காரியம். தங்களுக்கு பிரச்சனை இருப்பதையே இவர்கள் நம்ப மறுப்பதுடன், கோபமும் எரிச்சலும் அடைவார்கள்.

சிகிச்சைக்குச் சென்றால் குண்டாகிவிடுவோம் என்ற அதிக பயமும் சிகிச்சையை நிராகரிக்க அவர்களை தூண்டினாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி இவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியம்.

இவர்களுக்கு பழையபடி தேவையான அளவு எடையை அதிகரிக்கச் செய்வதும் தகுந்த உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவதும்தான் சிகிச்சையின் குறிக்கோள்.

சிலநேரங்களில், உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாடு (Malnutrition) ஏற்படும்போது மருத்துவமனையில் சேர்த்து ட்யூப்(Tube) மூலம் உணவை செலுத்த வேண்டியிருக்கும்.

நீண்ட கால சிகிச்சையாக, இவர்களுக்கு, உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால், மனச்சோர்வுக்கு மருந்தும் பரிந்துரைக்கப்படலாம்.

உணவியல் வல்லுனர்களின் ஆலோசனையும் இவர்களுக்கு உதவும். தங்கள் தோற்றம், சாப்பிடுவது, உணவு போன்ற விடயங்களைப் பற்றிய இவர்களின் தவறான கருத்து / சிந்தனையை மாற்ற ஆலோசனை வழங்கப்படும்.

ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டால், குறைந்தகால சிகிச்சையே போதுமானது.

click me!